உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

67

கண்ணகி சினிமாப் போல் இருந்தது. அடி மண்ணை வாரி எல்லாக் கூரைகளிலும் வீசினாள்.

"அபாண்டமா பழி சுமத்தும் நாக்குக்கு ஆண்டவன் கேக்கட்டும்? அந்த ஆத்தா கேக்கட்டும்!” என்று சொல்லிக் கொண்டு மகளை அழைத்துக் கொண்டு விசுக் விசுக்கென்று போனாள்.

“இவ பெரிய பத்தினி சாபம் வைக்கிறா?" என்று அம்மா நொடித்தாள்.

நாலைந்து மாசம் சென்றபின், ஒரு நாள்...

ஆவணி மாசம். சரவணன் பிறந்து முப்பது நாள். அத்தான் சேதி கொண்டு வந்தார்.

"உன் சின்னம்மா, மக, மருமகன்கூட வந்திருக்கா. வக்கீல் வசதராசர் வீட்டில வந்திருக்கா. ஸ்டாம்ப்வெண்டர் தரும ராசன் வந்துசொன்னான். உன் அப்பா போயிருக்காங்க...”

மனசு சுருசுருவென்று பொங்கி வந்தது.

"வக்கீலையாவை வச்சிட்டு, பாகம் கேக்கப் போறா. அந்தப் பையன் வெடவெடன்னு இருக்கிறான். எங்கியோ கம்பெனில வேலையாம். நம்ம சாதி இல்ல. வேற எனமாம். ரிஜிஸ்தர் கலியாணம் கட்டிருக்காம். அவ ஏற்கெனவே தொட்டுப்புட்டாம் போல...”

“அதைப்பத்திக் கேட்க நமக்கு என்ன மரியாதி இருக்கு? நாமதா வீட்ட விட்டுத்துரத்திட்டமே?” என்றாள் செவந்தி.

சின்னம்மா இந்தப் பக்கமே வரவில்லை.

அப்பா வக்கீல் வீட்டுக்குப் போனதும், அவள் பங்குக்கு ஒரு கிரயம் போட்டுக் கொடுத்து விடு ஏகாம்பரம்... தகராறு எதுவும் வேண்டாம் என்று சொன்னாராம்.

“அவங்களே அனுபவிச்சிக்கட்டும். இந்த ஊரு மண்ணு எனக்கு நஞ்சாயிட்டுது... நானும் எங்கப்பன் ஆத்தாவுக்குப் பொறந்தவ. என் பங்குக்கு நாயமாக் கிரயம் கொடுத்திடணும்” என்றாளாம்.