உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோபம்

39

உண்மைதான். என்ன செய்வது அதற்கு” என்றாள் கோமளம்.

“மாதே! ஒன்று செய். உன் அண்ணனை இங்கு வரச்சொல். நாளை நாம் மூவருமாகச் செல்வோம். இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் இடுகாட்டில் எம் அண்ணல் ஏகாந்தனுக்கு ஒரு பூஜை நடத்துவோம். அவர் காப்பாற்றுவார். உமது அண்ணன் தான் இதுவரை செய்த தவறை ஒன்றுவிடாது எழுதி அதை இலிங்கேசன் பாதத்திலே வைத்து வணங்கவேண்டும். ஆண்டவன் அருள் புரிவார்” என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டு போனார் சாமியார்.

கவலையுடன் உள்ளே சென்ற கோமளம், தனது படுக்கையறையில் ஒளிந்து கொண்டிருந்த தனது அண்ணன் வக்கீல் வரதாச்சாரியிடம் சாமியாரைப் பற்றிச் சொல்ல, அவனும் ஏற்பாட்டுக்கு ஒப்பினான்.

மறுநாள் இரவு 10 மணிக்கு சாமியார் வந்தார். வரவேற்று இருவரும் வணங்கினர். ‘எழுதி விட்டீரோ ஆண்டவனுக்கு விண்ணப்பத்தை’ என்றுகேட்க, ‘ஆம்’ என்று சொல்லி ஒரு கடிதத்தைக் கொடுத்தார். வக்கீலாக இருந்த பிறகு ஒரு ஜெமீனில் திவானாக இருந்து கள்ளக் கையொப்பம், இலஞ்சம் முதலிய பல செய்து, விஷயம் வெளிவந்துவிடவே சென்னைக்கு ஓடிவந்து தங்கையிடம் சரண் அடைந்த வரதாச்சாரி. சாமியார் அதை வாங்கி படித்துக்கூடப் பார்க்கவில்லை. சிறிது நேரம், மூவரும் ஆண்டவனைத் தொழுதனர்.

மணி பனிரெண்டடித்தது. மூவரும் சுடுகாடு செல்லப்புறப்பட்டனர். வீட்டு வாயிலை அடைந்ததும், எங்கிருந்தோ போலீசார் திடீரெனத் தோன்றினர். வரதாச்சாரியைக் கைது செய்தனர். சாமியிடமிருந்த பையையும் பிடுங்கிக் கொண்டனர். அதிலேதான் வரதாச்சாரி தன் குற்றம் பூராவையும் எழுதி வைத்திருந்த கடிதம் இருந்தது, மூவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு போலீஸ் கமிஷனரே இருந்தார்.


45345