பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

அயோத்திதாஸப் பண்டிதரின் முக்கியத்துவத்தை இன்று வரை தமிழுலகம் அறியவில்லை . அவரது படைப்புகள் இந்தத் தலை முறையினருக்கு எடாமல் போனதும் அதற்கொரு காரணம். அந்தக் குறையை நீக்கிடும் நோக்கில் அவரது படைப்புகளில் கிடைப்பதனைத்தையும் தொகுத்துத்தர திட்டமிட்டு முதலில் புத்தரது ஆதிவேதம் எனும் நூல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ந் தேதி (1999) வெளியிடப்பட்டது. அடுத்து அயோத்திதாஸப் பண்டிதரின் பிறந்த நாளான இன்று (மே, 20) இரு தொகுதிகளாக அவரது படைப்புகள் சிலவற்றைத் தொகுத்து வெளியிடுகிறோம். மேலும் இரண்டு தொகுதிகள் சில நாட்களில் வெளிவரவுள்ளன.

இரண்டாவது தொகுதியான இதில் ஸ்ரீ அம்பிகையம்மன் எனப் பண்டிதரால் குறிக்கப்படும் ஒளவையின் மூன்று நூல்களுக்கு - ஆத்திச்சுவடி, குன்றைவேந்தன், வெற்றிஞானம் - அயோத்திதாஸப் பண்டிதர் உரையெழுதியுள்ளார். தமிழ் அறிவுலகம் அறிந்திராத கோணத்தில் பௌத்தநெறிநின்று ஒளவையின் நூல்களைப் பண்டிதர் விளக்குகிறார். இவற்றுடன் கூடவே அம்பிகையம்மன் எனப்படும் ஒளவையின் வரலாற்றையும் அவர் இயற்றியுள்ளார். அதையும் இத்துடன் இணைத்து வெளியிடுகின்றோம்.

தமிழில் ஒளவையென்ற பெயரில் கிடைக்கும் பாடல்கள் யாவும் ஒருவரால் பாடப்பட்டவையல்ல. ஒளவையென்ற பெயரில் நான்குக்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர் என்று அறியமுடிகிறது.

சங்கப்பாடல்களில் அகம், புறம் இரண்டுமாகச் சேர்த்து 59 பாடல்கள் ஒளவையென்ற பெயரில் காணப்படுகின்றன. சங்ககாலம் தவிர்த்து பத்தாம் நூற்றாண்டிலும், பத்தாம் நூற்றாண்டிலிருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கிடையில் சோழர் காலத்திலும், 14, 15-ஆம் நூற்றாண்டுகளிலும் ஒளவையென்ற பெயர் கொண்ட புலவர்கள் வாழ்ந்திருக்கக் கூடுமென இலக்கிய ஆதாரங்களைக்கொண்டு கணிக்க முடிகிறது. இது தவிர வேறு இருவரும் இருந்துள்ளனர். சித்தயோகம், அறநெறி முதலியவற்றில் ஈடுபாடுகொண்டு பாடல்கள் இயற்றியவர்கள் இவர்களேயாவர்.