பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒருவனால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவரென்றும்; திருமணம் செய்து கொள்ளாமல் கன்னியாக 240 ஆண்டுகள் வாழ்ந்தவரென்றும்: கம்பன், புகழேந்தி, ஒட்டக்கூத்தன் ஆகியோரது சமகாலத்தவரென்றும்; கூழுக்குப் பாடியதால் கூழுக்கவ்வையென அழைக்கப்பட்டவரென்றும் (பெருந் தொகை) பலவாறான கதைகள் உள்ளன.

முருகனும், விநாயகனும் ஒளவையை விண்ணுலகுக்கு கூட்டிச் சென்றதாகவும் ஒரு கதை உள்ளது.

இவ்வாறு பலவாறாகவும் பேசப்படுகின்ற ஒளவையின் வரலாற்றினை அயோத்திதாஸப் பண்டிதர் அவர்கள் தனது நோக்கில் கட்டமைத்துள்ளார். பல்வேறு இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு பண்டிதர் தொகுத்துரைக்கும் வரலாறு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சமீபகாலங்களாய் நிகழ்ந்துவரும் அகழ்வாராய்ச்சிகள், இந்த நூற்றாண்டில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகளின் துணை கொண்டு பார்க்கும்போது தமிழ் மண்ணில் இருந்த பௌத்தத்தின் செல்வாக்கு மென்மேலும் தெளிவு பெற்று வருகிறது. அவ்விதத்தில் பண்டிதரின் இந்த வரலாறும் முக்கியமானதாகிறது.

புகழ் பெற்ற தமிழ் ஆய்வாளர் காமில் ஸ்வலபில் தொகுத்துள்ள தமிழ் இலக்கிய அகராதியில் (Lexicon of Tamil Literature - Kamil V.Zvelebil, E.J. Brill - New York, 1995) ஔவையைப் பற்றிய குறிப்பில் அயோத்திதாஸப் பண்டிதரின் ஆய்வு பற்றிய செய்தி இடம் பெறவில்லை. ஸ்வலபில் போன்ற ஆய்வாளர்களும் அறியமுடியாத அளவுக்கு அயோத்திதாஸப் பண்டிதரின் படைப்புகள் இருட்டடிப்புக்கு ஆளாகியுள்ளன. அறிவுத் தளத்திலும், அரசியல் தளத்திலும் அவரது சிந்தனைகளைப் புறக்கணிக்க முடியாதவைகளாக இடம் பெறச்செய்வதற்கு இந்தத் தொகுப்பு முயற்சி உதவுமெனில் அதுவே எமக்கு அளவில்லா மகிழ்ச்சி.

இந்த விளைச்சலின் பலன் வெகுமக்களுக்கு உரித்தாகட்டும்

20.5.1999.

தலித் சாகித்ய அகாடமி,
சென்னை.