பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

அதியன் விண்ணத்தனார்


அவ்வாறு, அவள் போயது, தனக்கும் தன் குடிக்கும். பழிதரும் செயலாம் எனக் கொள்வாளல்லள்; அவள் விரும்பிய அவனுக்கு அவளை மணம்செய்து தாராத் தன் செயலை பழியுடைத்து; அவ்வாறு சென்று தன் கற்பு நெறியினைக் காத்துக்கொண்ட அவள் செயலால் தன் குடிக்குவர இருந்த பழி நீங்கிற்று என்றே கருதுவாள்; தாய் அத்தகைய தூய உள்ளம் உடைமையால், சென்ற அவர்கள் மீண்டு இனிதே வருதலைப் பெரிதும் விரும்புவள். அவ்வாறு விரும்பும் ஒரு தாயின் உள்ளத்தை உணர்ந்து பாடியுள்ளார் புலவர்; காலையில், தம் வீட்டுக் கூரையில் அமர்ந்து காக்கை கரையின் விருந்தினர் யாரேனும் வருவர் என்பது ஒரு நம்பிக்கை. தன் வீட்டில் வந்து அமர்ந்த காக்கை ஒன்றைக் கண்டாள் அத்தாய்; அது கரைந்து, தன் மகளும், அவள் காதலனும் வரத் துணைபுரியாதா எனப் பெரிதும் விரும்பிற்று அவள் உள்ளம்; அவ்வாறு அது கரைய, அது உவப்பன உரைக்கத் துணிந்தாள். அக்காக்கை முன்சென்று நின்று, அதன் அழகிய தூவி, சிறிய வடிவம், கரியநிறம் ஆகியவற்றைப் பாராட்டினாள்; தன் மகளும், அவள் காதலனும் தன்னோடு இருந்து உண்டலை விரும்பிய தனக்கு, உணவு கிடைத்த வழி, தன் இனத்தைக் கூவி அழைத்து உடன் உண்ணும் உள்ளமுடைய அது உறுதுணைபுரியும் என்ற எண்ணத்தால், காக்கையின் அவ்வியல்பினை எடுத்துக் காட்டி, நீயும், நின் இனமும் உடன் உண்ணுமாறு உணவு தருவேன்; அவ்வுணவும், நீங்கள் விரும்பி உண்ணும் ஊன் உணவேயாகும்; அவ்வுணவையும் பொற்கிண்ணத்தில் வைத்துத் தருவேன் என்றெல்லாம் கூறினாள் தாயின் இவ்வுரைகளால் உளம் மகிழ்ந்து, அவள் உவப்பன அளிக்கும் உளம் கொண்ட வழி, அதனை நோக்கி, இவ்வளவும் பெற்ற நீ, செயற்கரும் செயல் எதையும் செய்யவேண்டுவதின்று; சென்ற என் மகளும், அவள் மனம் விரும்பும் அம் மாண்புடையானும் வருமாறு காலையில் கரைதல் ஒன்றையே வேண்டுகின்றேன் என வேண்டி நின்றாள். அவ்வாறு வேண்டியவள் என் மகளும், அவனும் வரக்கரைக எனத் தன் மகளை