பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்தி இளங்கீரனார்

7

யால் உண்டாய வருத்தம் வருத்த நிற்கும் தலைமகளை, மாலை மேலும் வருத்துவது, இயல்பாகவே பெருந்துயர் உற்றார் ஒருவர் மார்பிடத்தே கூரிய வேலை எறிதலோ டொக்கும் எனக் கூறிய உவமையும்,

“மாலை, காதலர்ப் பிரிந்த புலம்பின், நோதக
ஆரஞர் உறுநர் அருநிறம் சுட்டிக்

கூரெஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது.”

தலைவன் பிரிந்து செல்வதற்கு முன், தலைமகள் பெற்றிருந்த ஆற்றல் எல்லாம், அவன் பிரிந்து சென்ற பின்னர்ச் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வந்து இறுதியில் சிறிதும் இல்லாமல் அழிந்தமைக்குத், தெளிந்த கண்ணாடி மீது ஊதியக்கால் படிந்த ஆவி, முதலிற் பரந்து தோன்றிப் பின்னர்ச் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வந்து இறுதியில் முழுதும் மறைந்து போதல் போலும் எனக் காட்டிய உவமையும்,

“எள்ளற இயற்றிய நிழல்காண் மண்டிலத்து
உள்ளூது ஆவியிற் பைப்பய நுணுகி

மதுகை மாய்தல் வேண்டும்.”

தலைவன் பிரிவால் வருந்திய உயிர், அப்பிரிவுத் துயரைத் தாங்கலாற்றாது, தளர்ந்த உடலைவிட்டுப் பிரிந்து போதல், கொடிய சூறாவளியால் வருந்திய பறவைகள், தாம் தங்கியிருக்கும் மரங்கள் அச்சூறாவளியால் அலைப்புணல் அறிந்து, அவற்றை விட்டுப் பறந்து போதல் போலும் எனக் கூறிய உவமையும், சிறந்து தோன்றி, அவர் புலமை நலத்தினைப் புலப்படுத்தி நிற்றல் காண்க.

“என்னுயிர், விலங்குவெம் கடுவளி எடுப்பத்

துளங்குமரப் புள்ளில் துறக்கும்.”
(அகம்: எக)