பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪௭. கண்ணகனார்

'புணர்ச்சி பழகுதல் வேண்டா : உணர்ச்சிதர்ன் நட்பாம் கிழமை தரும்” என்ற குறள் கூறும் பொருளுரைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய உயரிய நண்பர்களாகிய கோப்பெருஞ் சோழன், பிசிராங்தையார் காலத்தே வாழ்ந்து அவர்கள் தம் நட்பின் சிறப்பினைக் கண்ணாரக் கண்டு நாவாரப் பாராட்டியவர் நம் புலவர் கண்ணகனார்.

கோப்பெருஞ்சோழன் சோணாடு ஆண்டிருந்த அரசன் : பிசிராங்தையார், பாண்டிய நாட்டில் உள்ள பிசிர் என்னும் ஊரில் வாழ்ந்தவர் : இருவரும் ஒருவரையொருவர் கண்டு அறிந்தவரல்லர் : பெயரையும், பெருமையையும் கேட்டே நட்புடையராயினர் : கோப்பெருஞ்சோழன், தன் மக்கள்தம் மாண்பிலாச் செயலால் மனமுடைந்து வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தகாலை, தன் அருகே தன் நண்பர் பிசிராங்தையார்க்கு இடம் ஒதுக்க வேண்டினான்; அவன் அருகிருந்த நண்பர்கள், 'ஐய! நீவிர் இருவரும் கேட்டன் மாத்திரையல்லது, யாவதும் காண்டல் இல்லை : மேலும், அவரோ மிக மிகச் சேய்மையில் உள்ளார் : அவர் வருதல் அரிதினும் அரிது. ஆகவே அவர்க்கு இடம் ஒதுக்கல் வேண்டுவ தின்று' என்றனர். ஆனல் அவனோ, 'என் நண்பன், என்பால் பேரன்புடையவன் செல்வக்காலை நிற்பினும் அல்லற்காலை நில்லலன்; வருவன் ; ஒதுக்குக அவற்கிடம்" எனக் கூறி உயிர்விட்டான் ; அவன் கூறியவாறே பிசிராந்தையாரும் வந்து சேர்ந்தார். வ்ருந்தி வடக்கிருந்து தாமும் உயிர்விட்டார்; "வருவன்” என்ற அரசனது பெருமையையும், அவன் உரை பழுதாகாவண்ணம் வந்த அவர் அறிவையும் கண்டு வியந்து வியந்து பாராட்டிய புலவர்களுள் கண்ணகனாரும் ஒருவர்.

பொன், ஆற்று வெள்ளம் அரித்துக் கொணர்ந்து கொடுப்பதால் கிடைக்கிறது; முத்தும், பவழமும் கடலில் மூழ்கிப் பெறுவதால் கிடைக்கின்றன; மணி, மலைப்பிளவுகளில் கிடைக்கின்றது; ஆறும், மலையும், அவற்றிற்கு அப்