பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்மூவனார்

11

கிடக்கும்; கொற்கைத் துறை உடைமையால், பாண்டியன் கொற்கைக் கோமான் என அழைக்கவும் பெறுவன்; “அலங்கிதழ் நெய்தல் கொற்கை முன்றுறை இலங்கு முத்துறைக்கும்,” “கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை,” (ஐங்: க௮ர௫, கஅ அ ) எனக் கொற்கைத் துறையினையும் பாராட்டியிருத்தல் காண்க.

பரதவர், கடலைச் சார்ந்துள்ள குடிசைகளில் வாழ்பவர்; கடல்மேற் சென்று மீன்பிடித்து வாழ்தலைக் குலத் தொழிலாக உடையவர்; கடல்மேற்செல்லும் அவர்கள், செல்வதற்கு முன்னர்க், கடற்கரை அடைந்து ஆங்குள்ள புன்னை மரத்தடியிலிருந்து தம் வலைகளை உலர்த்திச் கொண்டே இடையூறு இன்றி இனிதுசென்று மீள்வதற்கேற்ப, கடல், புயலும், பெருங்காற்றும் அற்று உளதா என ஏற்ற காலத்தை எதிர்நோக்கியிருந்து செல்வர் எனப் பரதவர் தம் வாழ்க்கைப் பண்பினைப் படம்பிடித்துக் காட்டுவர்.

“கானலம் சிறுகுடிக் கடன்மேம் பரதவர்
நீனிறப் புன்னைக் கொழுநிழல் அசைஇத்
தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி
அங்கண் அரில் வலை உணக்கும் துறை.” (நற்: ௪)

நெய்தல் நிலத்தார், உப்பளங்களில் கடல்நீர் பாய்ச்சி விளைத்த உப்பையும், உவர்நிலத்தே விளையும் உப்பையும், பண்டிகளில் ஏற்றிக்கொண்டு மலைகள் நிறைந்த உள்நாடு சென்று விற்றுவாழும், ஓரிடத்தும் நிலையாக வாழ்தலறியா வாழ்வுடையவர் உப்புவணிகராம் உமணர்; அவ் வமணர் குடிவந்த மகளிர், உப்பினைக் கூடையிற்கொண்டு ஊர்தோறும் சென்று நெல்லுக்கு விலைமாற்றி வரும் வணிகத் தொழிலுடையராவர் என உப்பு வணிகர் தம் வாழ்க்கை முறைகளையும் வரைந்து காட்டியுள்ளார்:

உவர்விளை உப்பின் குன்றுபோல் குப்பை
மலையய்த்துப் பகரும் நிலையா வாழ்கை -
கணங் கொள் உமணர். (நற்:௧௩௮)