பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடையன் சேந்தங்கொற்றனார்

ஒருகாலத்தே வடுகர் கைப்பட்டிருந்தது; அக்காலைச் சோணாடு ஆண்டிருந்தவன் இளம்பெருஞ் சென்னி என்பவனாவன்; அவன் அப்பாழி நகரைத் தன் முன்னோர் பலரும் கைப்பற்ற முயன்று முயன்று தோற்றுப் போனதை எண்ணினான்; அவர் முயன்றுவிட்ட அவ்வினையினை முடித்துக்காட்டல், தான் பிறந்த குடிக்குத் தான் செய்ய வேண்டிய கடமையாம் என உணர்ந்தான்; உடனே யானைப்படை நிறைந்த பெரும்படையோடு பாழிநகர் சென்றான்; ஆங்கு அக்காலை ஆண்டிருந்த வடுகர் என்பார் தலைகளை வெட்டிவீழ்த்தி வெற்றி பெற்றான்; தம் குடிக்குக் குறைவினையாய் இருந்ததனை முடித்துப் புகழ்பெற்றான் என்ற வரலாற்றினை அவர் பாடல் உணர்த்துகிறது. இவ்வாறு பாழியை வென்று, குறைவினை முடித்துக் குடிக்கடன் ஆற்றிய கோ, கரிகாற் பெருவளத்தானின் தந்தையாகிய உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியே ஆவன் என்பதை உறுதி செய்யும் சான்றுகள் பல, தமிழ் நூல்களுடையே ஆங்காங்கே காணப்படுகின்றன.

“சென்று நீடுநர் அல்லர்;அவர்வயின்
இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை!
அம்பு தொடைஅமைதி காண்மார் வம்பலர்
கலன் இலராயின் கொன்றுபுள் ஊட்டும்
கல்லா இளையர் கலித்த கவலை...........
எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன்
விளங்குபுகழ் நிறுத்த இளம்பெரும் சென்னி
குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார்
செம்புறம் புரிசைப் பாழி நூறி
வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்
கொன்ற யானைக் கோட்டிற் றோன்றும்
அஞ்சுவரு மரபின் வெஞ்சுரம் இறந்தோர்
நோயிலர் பெயர்தல் அறியின்
ஆழல மன்னோ தோழி என் கண்ணே.”

(அகம் : ௩௭௫.)

வரலாற்று நிலையினை உணர இயலாது இருண்டு கிடந்த பழந் தமிழகத்தின் வரலாற்றினை ஓரளவு விளக்கிக் காட்டிய புலவர் பெருந்தகையார்க்குத் தமிழுலகம் நன்றி. செலுத்தும் கடப்பாடுடையதாகுக!