பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளங்கீரனார்

65

எல்லாம் எதிர்த்துப் போராடிப் போக்கி முடித்து வெற்றி பெற்ற அக்காலத்தே, அவர் உள்ளத்தில் எழும் இன்பத்திற்கோர் எல்லை காணலும் இயலுமோ? அமெரிக்காவைக் காணச் சென்ற கொலம்பஸ், கடலில் பல நாள் உழன்றதற்குப் பின்னர்க் கரை கண்ட காலத்தே, அவன் கொண்ட இன்பத்திற்கோர் எல்லை உண்டோ ? இமயத்தின் உச்சியைக் காணவேண்டும் என உரங்கொண்டு முயன்று, பனிக் கொடுமை பாரது ஏறி, அதன் முடியில் தம் காலை வைத்தார் வைத்த அக்காலை அவர் உள்ளம் கொண்ட இன்பத்தினை எவ்வாறு அளவிட்டுக் கூறல் இயலும்? தொடங்கிய வினையில் வெற்றி கண்டார் கொள்ளும் இன்பத்தினை அளவிட்டுக் காணல் இயலாது; அவ்வின்பத்திற்கு, வேறு எவ்வின்பமும் இணையாகாது; அவ்வின்பம் ஒப்பும், உயர்வும் அற்ற பேரின்பமாம், இவ்வின்பத்தின் இயல்புணர்ந்த புலவர், தலைவனுக்குத் தலைவி தரும் இன்பம், வினைமுடித்து வீறெய்தினார் பெறும் இன்பத்திற்கு நிகராம் எனக் கூறியுள்ளார்! என்னே அவர் தம் வினையறி உள்ளம்!

வினைமேற் சென்ற தலைமகன், அவ்வினையை வெற்றியுற முடித்துக்காண எண்ணுவனாயின், அவன், அவ்வினையிலன்றி வேறொன்றிலும் செல்லா உள்ளமுடையனாதல் வேண்டும்; அந்நிலையில், அவன் உள்ளத்தே, வீட்டில் விட்டுப் பிரித்துறையும் மனைவியின் எண்ணம் உண்டாகிவிடின், அவனால் அவ்வினையை முடித்தல் முடியாதாம். ஆகவே, அக்காலத்தில் அவன் அவளை நினைத்தலும் கூடாது; இத்தகைய உள்ள உரம்கொண்டு உழைத்து, அவ்வினையில் வெற்றி கண்டக்கால், இவ்வெற்றியாலாய இன்பத்தை நம்மோடு ஒருங்கிருந்து நுகர்தற்கு நம் தலைவி ஈண்டில்லையே என்ற எண்ணம் எழல் எவர்க்கும் இயற்கையாம்; அந்நிலையில் அவளைப்பற்றிய எண்ணம் எழல் தவறாகாது; அதைத் தடுத்து நிறுத்தலும் எவர்க்கும் ஆகாது; இது பற்றியன்றோ, “கிழவி நிலையே வினையிடத்து உரையார்; வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்” (தொல் - கற்பு:-

அ. வி. —5