பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௫. இனிசந்த நாகனார்

நாகனார் என்ற இயற்பெயருடைய இவர், இனியகுரல் கொண்டு பாடவல்லராதல் பற்றி, இனிசந்த நாகனார் என அழைக்கப் பெற்றுளார்; இனிய சந்தம், இனிசந்தம் எனக் குறைந்து வந்துளது; இவர் பாடிய பாட்டொன்று நற்றிணைக்கண் இடம் பெற்றுளது.

தான் விரும்பிய காதலனுக்குத் தன்னை மணம் செய்து தர மறுக்கின்றனர் என்பதறிந்த தலைமகள் ஒருத்தி, தமர் அறியாவண்ணம், தன் தலைவனோடுகூடி அவனூர் சென்றுவிட்டாள்; தன் மகளின் போக்கினைக் கண்டாள் தாய்; மகளிர் மனம் விரும்பும், மாண்புடையாரை மணந்து வாழ்தலே மதிக்கத்தக்க செயலாம்; தன் மகளும் அதையே செய்துள்ளாள் ஆதலின், அவள் அறநெறியே மேற்கொண்டுள்ளாள் என்று எண்ணினாள் ; உள்ளத்திற்கு ஓர் அளவு ஆறுதல் உண்டாயிற்று; அறநெறி நின்றாளாயினும், அவள் இளமைப் பருவம் மாறாதவள், அரிய காட்டு வழியினைக் கடந்து செல்லும் ஆற்றல் இல்லாதவள் என்ற எண்ணம் எழத் துயர் உற்றாள்; துயர் உற்றாள் கண்முன் மகளின் இளமைக்கால நிகழ்ச்சிகள் நிரலே தோன்றலாயின; தான் அணிந்த மாலை சிக்குணக் காணினும், கைவளை கழலக்காணினும் மேகலை முறைமாறிக்கிடக்கக் காணினும், அவற்றைத் திருத்திக்கோடற்கு அறியாளாய்த் தன் அழகு கெட்டது அறிந்து அழுது வாடும் அவள் கண்கள், சென்ற வழியின் கொடுமையால் சிவந்து சிதைவுற்றனவோ? என்று எண்ணிஎண்ணி ஏங்கி நின்றாள். என்னே அத்தாயின் அன்பு!

“நயந்த காதலற் புணர்ந்தன ளாயினும்,
சிவந்தொளி மழுங்கி அமர்த்தன கொல்லோ?
கோதை மயங்கினும், குறுந்தொடி நெகிழினும்,
காழ்பெய் அல்குல் காசுமுறை திரியினும்
மாண்நலம் கையறக் கலுழும் என்

மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே.” (நற் : ௬௬.)

அ. வி.—6