பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

அதியன் விண்ணத்தனார்

பெருமை, அவனைப் பெரியோர் வாழ்த்தும் வாழ்த்து வகை ஆகியவற்றை எடுத்துக்கூறிப் பாராட்டியுள்ளார்.

ஒருவர்க்கு அறிவுரை கூறுவார், இவர்போல் வாழ்க! இவைபோன்றன செய்க என அறிவுரை கூறுங்கால், உயர்ந்தாரையும், உயர்ந்த செயல்களையுமே எடுத்து உவமை காட்டுவர்; உவமையின் இயல்பு இதுவே, 'உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை," என விதியும் கூறியுள்ளார் ஆசிரியர் தொல்காப்பியனார். இந்நெறி நோக்குங்கால், கொடை, கொற்றம், அன்பு, அருள், அறம் ஆகிய குணங்கள் உடைமையால், உலகில் உள்ளார்க்குப் பெருநற் கிள்ளியை உவமையாகக் கூறல் வேண்டுமேயன்றி, அவனுக்கு உவமையாகக் கூறவல்லார் உலகத்துள் ஒருவரும் இலர்; அத்துணை உயர்வுடையான் அவன் என்றும் உலக நாடுகளுள், உயர்வுற்ற நாடு இது என்றும் ஆராய்ந்து கூறுவார், அவ்வாறு உயர்ந்த நாடு இவன் நாடே எனக் கூறுவர். உலகில்வாழ் அரசர்களுள் உயர்வற உயர்ந்த அரசன் இவன் என ஆராய்ந்து கூறுவர், அவ்வாறு உயர்ந்த அரசன் இவ்வரசனே என்று கூறுவர்: என்று பெருங்ற்கிள்ளியின் பெருமைகளையும், அவன் தன்னைப் பாடிவருவார்க்கு, மலையிடைத் தோன்றும் மாணிக்கங்களையும், காட்டில் பெறப்படும் பொன்னையும் கடலிற்றோன்றும் முத்துக்களையும், வேறுவேறு வகையான ஆடைகளையும், கள் நிறை குடங்களேயும் வறுமைதி வழங்குவன் என அவன் கொடைப் பெருமையினையும் பாராட்டுவதறிக. -

"பிறர்க்கு உவமம் தானல்லது
தனக்கு உவமம் பிறர் இல்,"
நாடென மொழிவோர், அவன் நாடென மொழிவோர்;
வேர்தென மொழிவோர், அவன் வேந்தென மொழிவோர்;'
மலைபயந்த மணியும், கடறுபயந்த பொன்னும்,
கடல் பயந்த கதிர் முத்தமும்,
வேறுபட்ட உடையும், சேறுபட்ட தசும்பும்,
கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப
நனவின் நல்கியோன் நசைசால் தோன்றல். '(புறம்: ௩௭௭)