பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

ஒளவையார்

கூறினார், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். இவ்வாறு ஆண்மையும், அருளும் ஒருங்கே பெற்று, உயர்ந்தோர் புகழ வாழ்ந்த காரணத்தால்தான், அவன்பால் சென்று, அவனைப்பாடி, அவன் அளிக்கும் பரிசில்பெற விரும்பினர் ஒளவையாரும்.

விரும்பிய ஒளவையார், காடும், மலையும் பல கடந்து தகடூர் சென்று சேர்ந்தார்; அரண்மனைவாயில் அடைந்து, 'ஒளவை வந்துள்ளாள் அரசனைநாடி' என்று அறிவித்துச் சிறிது இருந்தனர்; அதியமான், அவரை விரைந்து வரவேற்றான் இல்லை; ஒளவையார்க்கு ஆத்திரம் மூண்டது; மதியாதார் கடைவாயில் மிதியாமை கோடியுறும் என்ற உயர்பே ருள்ளம் உடையார். அவர் தம் பாடலேக் கேட்கப் பேரரசர் பலர் ஏங்கிக் கிடக்கின்றனர்; அவ்வளவு உயர்வுடையார் அவர்; அத்தகையார், அவன் அரண்மனை வாயிலில் வந்து நிற்பவும், வரவேற்கவில்லை எனின், அவர்க்கு ஆத்திரம் மூண்டதில் வியப்பொன்றும் இல்லையன்றோ? உடனே வாயில் காவலனை விளித்தார்; 'உங்கள் அரசன் வாயிலில் வந்துநிற்கும் என்போன்றே புலவர்கள், பொருளால் வறியரே ஆயினும், புலமையால் வறியர் அல்லர்; அவர்கள் பாடிப் பிழைப்பார் எனினும், வழியில் போவார் எவரையும் பாடி ஏமாறும் இழிவுடையாரல்லர் வண்மையுடையாரை வரிசையான் அறிந்தே பாடுவர்; அவர் பாடிய பாடல் பயனற்றுப்போனது இதுவரை இல்லை. வள்ளல்களைப் பாடிய பாடல்கள், அப் புலவர்கள், உள்ளத்தே யுள்ளியதை முடித்துத் தருவதில் ஒருபோதும் தவறியது இல்லை; உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளமுடையோரே எனினும், புரவலர்பால் சென்று, பரிசில் பெறுவதில் பேரார்வம் கொண்டேநிற்பர்; அத்தகைய இரவலர் தமக்கு "இல்லை"என்று கூறி அடைக்கும் வாயில் அன்று, உங்கள் அரசன் வாயில் என மதித்தே யானும் இங்கு வந்தேன்; ஆனால், அதியமான் அன்புடன் வரவேற்றான் இல்லை; என் உண்மை உயர்வை உள்ளவாறு உணரும் அறிவு இல்லையோ அல்லது அவன்