பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையாரால் பாடப்பெற்றோர்

67

அவன் பகைவர்க்கு அச்சம் உண்டாகச் செய்தால் ஒரு வேளை போர் நிகழ்வதைத் தடுத்தலும் கூடும் என எண்ணினார்; ஆகவே, அதியமான் பகைவர்களே நோக்கிக் கீழ்வரும் அறிவுரைகளைக் கூறலாயினர்; "தன்பால் வரும் இரவலர்க்குப் பரிசாக அவன் அளிக்கும் தேர்களை, மாறாது பெய்யும் மழைத்துளிக்கு உவமை கூறுவர் புலவர் எனின் அவன் தேர்ப்படையின் பெருமை என்னால் கூறல் இயலாது : அவன் நாட்டுத் தச்சர் ஒவ்வொருவரும், நாள் ஒன்றிற்கு எட்டுத்தேர் செய்யும் அளவு தொழில் துணைபுரியும் இயல்பினர். ஆதலின் அவன் தேர்ப்படை மிக்கோன் என்பது தெளிவு; கோடுகளிற் செறிக்கப்பெற்ற இரும்புத் தொடிகள் பிளவுறுமாறு பகைவர் கோட்டை வாயிற்கதவைக் குத்திக்குத்தி அழிக்கும் ஆற்றல் வாய்ந்தது அவன் யானைப்படை; போர்க்களத்தே பரந்து வந்து, ஒன்று கூடித் தாக்கும் வீரர்களின் மாலையனிந்த மலர்ந்த மார்பு பிளந்து உருவழியுமாறு துதித்துப் பாய்ந்து ஒடுதலால், அவர்தம் இரத்தக் கறைபட்ட காலுடையன அவன் குதிரைப்படை; பகைவரை வெட்டி வெட்டி மழுங்கின வாள், பகைவரைக் குத்திக் குத்திக் கோடும், நுதியும் சிதைந்து, செப்பனிடப்பெற்ற வேல் ஆகியவற்றை ஏந்தி, அடிக்கும் கோலுக்கு அஞ்சாது எதிர்மண்டும் அரவினையொத்த ஆற்றல் வாய்ந்து விளங்குவர் அவன் வீரர்கள்; அவன் படை பெரிதே எனினும், அப் படையினைப் பயன் கொள்ளும் அவன், அதற்குத் தகுதியிலனாயின்,

நிலைமக்கள் சால உடைத்துஎனினும், தானை
தலைமக்கள் இல்வழி இல்" (திருக்குறள், ௭௭0)

எனக் கூறும் வள்ளுவர் வாக்கேபோல், அப் பெரும்படையால் பயன் இன்றாம் என எண்ணத் தோன்றும், ஆனால், அதியமான் அத்தகையான் அல்லன்; அப் பெரும்படையினைப் பணிகொள்ளும் பேராற்றல் பெற்றவன்; அதற்கேற்ற உடற்கட்டும் உறுதியும் ஊக்கமும் உடையான்: படையைப் போன்றே அவனும் போர்வேட்கை மிக்கோனே; ஆகவே, பகைவீர்! அதியமான், இளையன்;