பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பதிப்புரை

இயற்கையோ டொன்றி இன்புற வாழ்ந்தவர் தமிழர். அவர்தம் வாழ்க்கை வரலாற்றுண்மைகளைக் கிளந்தெடுத் துரைப்பன சங்க நூல்கள். அவைகளுள் பல பாக்கள் புனைந்து உதவியவர் 'பரணர்' என்னும் பண்புடைப் புலவர் பெருமகனாராவர்.

இவர்தம் அரும்பெரும் வாழ்க்கை வரலாற்றையும் இவரைப் போன்ற ஏனைய சங்கப் புலவர்கள் வரலாற்றையும் நம்மனோர் யாவரும் அறிந்து மகிழவேண்டுவது முதற்பெருங் கடனாகுமன்றோ?

இக் கருத்தை உட்கொண்டு சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை என்னும் தலைப்பில், முதற்கண் 'கபிலர்' என்னும் பெயரால் கபிலர் வரலாற்றைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இஃது 'பரணர்'வரலாறு. ஏனைய புலவர் வரலாறுகளும் இவ்வரிசையில் தொடர்ந்து வெளிவரும். இதனையும் ஆக்கித்தந்தோர் திரு. புலவர், கா. கோவிந்தன், எம். ஏ., அவர்களேயாவர். .

இவைகள் யாவற்றையும் அவ்வப்போது நந்தமிழ்ப் பெருமக்கள் வாங்கிக் கற்று இப் பணியில் எமக்கு மேலும் மேலும் ஊக்கம் அளிப்பார்களென நம்புகின்றோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.