பக்கம்:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் - 613 010, இந்தியா.


முனைவர் சி. சுப்பிரமணியம்
துணைவேந்தர்

அணிந்துரை

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுச் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் நிறுவப்பட்டுச் செம்மொழிக் கருத்தரங்குகளும் பயிலரங்குகளும் ஆய்வுகளும் நடத்தப்படுவதுடன் சங்க இலக்கியச் செம்பதிப்புகளும் உருவாக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில் தமிழ்ப் பல்கலைக்கழகம் சங்க இலக்கியச் சொல்லடைவை வெளியிடுவது மிகமிகப் பொருத்தமானது எனக் கருதுகின்றேன். இந்தச் சொல்லடைவு பொருத்தமான சூழலில் நான் துணைவேந்தராகப் பொறுப்பிலிருக்கும் காலத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவருவது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக உள்ளது.

சங்க இலக்கியம் பற்றிய புரிதலுக்கும் ஆய்வுக்கும் மொழி வரலாற்று உருவாக்கத்திற்கும் அகராதிப் படைப்புக்கும் சொல்லடைவு மிகமிக முக்கியமானது. சங்க இலக்கியம் மக்கள் இலக்கியமாகப் பொதுமக்கள் மத்தியிலேயும் பரவ வேண்டும் என்பதும் செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் ஒரு குறிக்கோள். இந்தக் குறிக்கோளுக்கு உதவும் வகையில் அதன் சொற்றொகுதி பற்றிய ஒட்டுமொத்த அறிதலும் மக்கள் மத்தியில் பரவ வேண்டியது மிகவும் அவசியம். இந்த அவசியத் தேவையை இந்தச் சூழலில் இந்தச் சொல்லடைவு வழி நிறைவேற்றும் முகமாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்த நூலை இப்போது வெளியிடுகின்றது.

சொற்பொருள் அடைவாக இது உருவாக்கப்படவில்லை என்றாலும் ஒரு சொல்லின் சங்க இலக்கிய இருப்பை அதன் முழுமையான வருகை இடங்களை அறிந்து கொள்ளப் பயன்படுவது மட்டுமல்ல சொற்களின் பயன்பாட்டு மாற்றங்களை முன் பழந்தமிழ் பின்பழந்தமிழ் எனும் வரலாற்று ரீதியில் அறியவும் அவற்றின் புழக்கப் பரிமாணத்தைப் பயில்வின் அடர்த்தியை உணர்ந்து கொள்ளவும் இந்தச் சொல்லடைவு பேரளவில் உதவக்கூடியதாக உள்ளது. எந்தச் சொல்லடைவிலும் இல்லாத வகையில் சங்ககால மொழிச்சமுதாயத்தில் நிலவிய சொல்லாக்கம் பற்றிய அறிவைப் பெற உதவும் வகையில் இந்தச் சொல்லடைவு கூட்டுச் சொற்களைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.

அகராதியியல் மனப்பாங்கோடு இந்த நூலை உருவாக்கித் தந்துள்ள முனைவர் பெ. மாதையன் அவர்களை நான் மிகமிகப் பாராட்டுகிறேன். இதன் தொடர்ச்சியாய்த் தமிழிலக்கியங்கள் பற்றிய இத்தகைய சொல்லடைவுகளை அவர் உருவாக்கித் தந்து தமிழ்கூறு நல்லுலகிற்குத் தொடர்ந்து பயன்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும்போல் தமிழுலகம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இந்த நூலையும் வரவேற்றுப் பயன்பெற வேண்டும் என்பது என் விழைவு. இந்நூலை மிக அழகுற வெளியிட்டுச் சிறப்புச் செய்துள்ள தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறையினருக்கு என் நெஞ்சு நிறைந்த பாராட்டுதல்கள்.

Pfüveswar man (சி. சுப்பிரமணியம்)