பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

99

“இரவுஅருந்தி எழுந்த கருங்கால் வெண்குருகு
 வெண்கோட்டு அருஞ்சிறைத் தாஅய் கரைய
 கருங்கோட்டுப் புன்னை இறைகொண் டனவே”

-நற். 67 : 3-5

“பொதும்பில் புன்னைச் சினைசேர்பு இருந்த
 வம்ப நாரை இரீஇ ஒருநாள்”
-அகநா. 190 : 6-7

“புன்னைஅம் பொதும்பில் இன்நிழல் கழிப்பி”
-அகநா. 340: 2

“பூவிரி புன்னைமீது தோன்று பெண்ணைக்
 கூஉம் கண்ணஃதே தெய்ய”
-அகநா. 310 : 12-13

“புன்னை நறும்பொழில் செய்த நம்குறியே”
-அகநா. 360 : 19

“மின்இலைப் பொலிந்த விளங்குஇணர் அவிழ்பொன்
 தண்நறும் பைந்தாது உறைக்கும்
 புன்னையங் கானல் பகல் வந்தீமே”
-அகநா. 80 : 11-13

மேலும், புன்னையைக் குறியீட்டிடமாகக் குறிக்கும் ஒரு நயம் மிக்கப் பாடலைக் குறிப்பிட வேண்டும்.

நெய்தல் நிலத் தலைமகள் ஓர் அழகிய புன்னை மர நிழலைப் பகற்குறியிடமாகக் கருதி வருகின்றான். அவனை வரைவு கடாவுங் குறிப்பில் தோழி கூறுகின்றாள். “காதல் தலைவ! இன்று ஏன் புதிதாக இந்த இளைய மரத்தின் அடியில் நிற்கின்றாய்? இப்புன்னையைப் பற்றிய வரலாற்றை நீ அறியாய்! இஃது ஒரு தனிச் சிறப்புடையது; எங்களால் வளர்க்கப்பட்டது. தலைவியும், யானும் தோழிகளுடன் இளமையில் இங்கு விளையாடினோம். அப்போது ஒரு புன்னைக் கொட்டையை விளையாட்டாக மணலுக்குள் அழுத்திப் புதைத்தோம். ஒரு நாள் அது முளைத்து விட்டது. அதன்பால் எங்களுக்கு ஒரு பரிவுண்டாயிற்று. அதனால் எங்களுக்கு ஊட்ட வந்த நெய்யையும், பாலையும் அதற்கு ஊற்றி, ஊட்டி வளர்த்தோம். எங்களுடைய அன்னை ஒரு நாள் இப்பக்கம் வந்தனள். இவ்வளர்ப்புப் புன்னையைப் பார்த்து மகிழ்ந்தாள். எங்களிடம் அன்னை ‘உங்களால் வளர்க்கப்பட்டபடியால் இப்புன்னை எனக்கு உங்களைக் காட்டிலும் சிறந்ததாகப் படுகின்றது. உங்களால் வளர்க்கப்பட்ட இவள் உங்களுக்குத் தங்கையாவாள்’ என்று கூறிப் புன்னையின் சிறப்பைப் பாராட்டினாள்.