பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கவிர்–முள்முருக்கு–கலியாண முருங்கை
எரித்ரைனா இன்டிகா (Erythrina indica, Lam.)

சங்க இலக்கியங்கள் கூறும் ‘கவிர்’ என்பதற்கு உரையாசிரியர்கள் ‘முள்முருக்கு’ என்று கூறுவர். இது ஒரு மரம். இதன் புறத்தில் ‘முள்’ முதிர்ந்து இருக்கும். இதன் மலர் செந்நிறமானது. சண்டையிடும் சேவலின் பிடர் சிலிர்த்தது போன்ற இணரை உடையது.

சங்க இலக்கியப் பெயர் : கவிர்
பிற்கால இலக்கியத்தில் வேறு பெயர் : புழகு
பிற்கால இலக்கியப் பெயர் : முள்முருக்கு, மலை எருக்கு
உலக வழக்குப் பெயர் : கலியாண முருங்கை
தாவரப் பெயர் : எரித்ரைனா இன்டிகா
(Erythrina indica, Lam.)

கவிர்–முள்முருக்கு–கலியாண முருங்கை இலக்கியம்

கவிர் என்பது, இற்றை நாளில் கலியாண முருங்கை என வழங்கப்படுகிறது. இது முருக்கு இனத்தைச் சேர்ந்தது. மரத்தாலும், மலரின் நிறத்தாலும் இரண்டும் ஒத்தவை. பிங்கலம்[1] இதனை முள்முருக்கு என்றது. பிற்கால இலக்கியங்களிலும் இது முள்முருக்கு எனப்படுகின்றது. உரையாசிரியர்கள் ‘கவிர்’ என்பது முள்முருக்கு என்றனர். இலக்கியங்களை உற்று நோக்கினால் “செம்முகை அவிழ்ந்த முள்முதிர் முருக்கு” (அகநா. 99 : 2) என்றாங்கு. ‘கவரில்’ முள் இருப்பதாகக் குறிக்கப்படவில்லை. ஆயினும், முருக்காகிய பலாசத்திலும் (அகநா. 99)

 

  1. பிங்.நி : 2695 “கவிரே சஞ்சுகம் முள் முருக்காகும்”