பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

சங்க இலக்கியத்

புனமுருக்குத்தான் அகநானூற்றிலும், பிற சங்க இலக்கியங்களிலும் பயிலப்படும் ‘முருக்கு’ எனக் கோடல் பொருந்தும். இதனைச் ‘செம்பூமுருக்கு’ என்றார், நெடுங்கண்ணனார் (குறுந். 156). இதிலுள்ள முருக்கு என்றது புரச மரத்தை; இது பலாசமென்றும் கூறப்படும் என்று உ. வே. சா. உரை கூறுவர். ஆகவே பலாசம் என்பது புரசு எனவும் முருக்கு எனவும் கூறப்படுமாறு கண்டு கொள்ளலாம்.

இனி, புழகு என்பது மலை எருக்கு எனவும், செம்பூவுமாம், புனமுருங்கையுமாம் எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர். கலைக் களஞ்சியமும்[1] புழகு என்பது புனமுருங்கை என்றும் கூறும். ஆகவே புழகு என்பது புனமுருக்காதல் வலியுறும். பலாசத்திற்கு நிகண்டுகள் கூறும் பிறபெயரான புனமுருக்கு நெடுங்கண்ணனார் கூறும் செம்பூ முருக்கு ஆதலும், புழகு என்பது நச்சினார்க்கினியர் கூறியாங்கு, புனமுருங்கையாதலும் கூடும். ஆகவே, பலாசம் என்பதற்குச் சங்க இலக்கியம் கூறும் வேறு பெயர்கள் முருக்கு , புழகு எனவும், பிற்கால இலக்கியப் பெயர்கள் புரசு, புனமுருக்கு, புனமுருங்கை, புரசை எனவும், உலக வழக்குப் பெயர் புரசு எனவும் ஒருவாறு கூர்ந்து கண்டறியலாம்.

பலாசம் ஓர் அழகிய மரம். அடிமரம் பருத்திருக்குமாயினும், வலிய மரமன்று. ‘நாரில முருங்கை’யை ஒத்தது. இதனால், இதனைப் புனமுருக்கு, புனமுருங்கை, புழகு என்று கூறுவது பொருந்தும். இம்மரம் ஏறக்குறைய 10 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை உயர்ந்து வளரும். சேலம் மாவட்டத்தில் மாதேவ மலைக்குச் செல்லும் வழியிலுள்ள சிறுபுறவில் 1000 மீட்டர் உயரமுள்ள மலைப்பாங்கில் பலாசம் மிகுத்து வளர்கிறது. இம்மரம் மூன்று அகன்ற பெரிய சிற்றிலைகள் கொண்ட கூட்டிலைகளை உடையது. இம்மரம் பூக்கும் போது இதன் இலைகள் உதிர்ந்து விடுகின்றன. அதனால், இதனை மிக அழகிய செந்நிற, முருக்கென்று கூறுவது ஒக்கும்.

பலாசம் ஆகிய முருக்கில் அரும்பு-கரும்பச்சை நிறமான புறவிதழ்களை உடையது. கிளைகளில் பூக்கும் இதன் மலர்கள் ‘செந்தீயை மருளச் செய்யும்’ என்றார் குன்றியனார்.

“கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
 எரிமருள் பூஞ்சினை இனச்சிதர் ஆர்ப்ப”
-அகநா. 41 : 1-3


  1. கலைக் களஞ்சியம்: 5