பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

223

என்பர். மேலும், இதன் பவள இதழை மகளிரது செவ்வாய்க்கு உவமிப்பர். அதிலும் தம்பலந்தின்று சிவப்பேறிய செவ்வாய்க்கு உவமையாக்குவர் திருத்தக்கதேவர்.

“முருக்கிதழ்க் குவிகமூட்டி வைத்தன முறுவற் செவ்வாய்”[1]

இத்துணைச் சிறப்பிற்றாய இச்செம்மலரில் மணமில்லை. இதனை மக்கள் சூடிக் கொண்டதாக அறிகிலம். எனினும், ‘நாறாப் பூவும் தேவருக்காம்’ என்ற வண்ணம், எம்மலரையும் தம்மலராகக் கொள்ளும் சிவன் முடியில் இம்மலரைச் சேர்த்த ஞானசம்பந்தர்,

“எருக்கொடு முருக்கு சடைமேல் அணிந்த எம்அடிகள்”[2]

என்றார்.

பலாச மரம் உறுதியற்றது; பருத்த அடி மரத்தை உடையது; அகன்ற இலைகளை உடையது. வேல் வீசியும், அம்பெய்தும் பயிற்சி பெறுபவர், இம்மரத்தைக் குறிபொருளாகக் கொண்டனர். கோசர் இவ்வாறு பயின்றதைக் காரிக்கண்ணனார்:

“. . . . . . . . . . . . . . . . வெல்வேல்
 இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
 இகலினர் எறிந்த அகல்இலை முருக்கின்
 பெருமரக் கம்பம் போல”
-புறநா. 169 : 8-11

இதன் மரத்தால் செய்த கைத்தண்டைக் கமண்டலத்துடன் பிடித்த படிவ உண்டிப் பார்ப்பன மகனைப் பற்றிக் குறுந்தொகை (156) கூறும். தன்கருமஞ் செய்யும் தவ யோகியரின் கைத்தண்டு புரசமரத்திற் செய்யப்படுவது உலக வழக்காதலின், பலாச மரத்தைப் புரசு எனக் கூறுவது பொருந்தும்.

‘பலாசம்’ தாவரவியலில் பாப்பிலியோனேட்டே என்ற துணைக் குடும்பத்தையும், பூட்டியா என்ற பேரினத்தையும் சேர்ந்தது. இக்குடும்பத்தில் 59 பேரினங்கள் தமிழ் நாட்டில் வளர்வதாகக் ‘காம்பிள்’ கூறுவர். பூட்டியா என்ற பேரினத்தில், 2 சிற்றினங்களே உள்ளன. பூட்டியா பிராண்டோசா என்ற இவ்விலையுதிர் பலாச மரம் (புரசு) தமிழ் நாட்டின் எல்லா வறண்ட மாநிலங்களிலும், காடுகளிலும் வளர்வதைக் காணலாம். கரிய மண்ணிலும், ஓரளவு உப்பளரான நிலத்திலும் வளர்கிறது.


  1. சீ. சிந்: 1454 : 1
  2. ஞானசம்பந்தர் தேவாரம்