பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொன்றை–கடுக்கை
காசியா பிஸ்டுலா (Cassia fistula, Linn.)

‘கொன்றை’யைத் ‘தூங்கிணர்க் கொன்றை’ என்றார் கபிலர் (குறிஞ். 86). தொங்குகின்ற இயல்பை உடைய இதன் நீண்ட பூங்கொத்தை மேல் நோக்கி வளைத்துக் கட்டி வைத்தாலும் இதன் இணர் திரும்பத் திரும்ப கீழ் நோக்கியே வளரும். இதன் இயல்பைப் பல சோதனைகள் செய்து கண்டு கொண்டோம். இதற்குச் ‘சரக்கொன்றை’ என்ற பெயரும் உண்டு. கொன்றை மரம் சிறியது. மலர்களில் பொன் நிறமான மஞ்சள் இதழ்கள் உள்ளன. பூத்த நிலையில் இம்மரம் மிக அழகாக இருக்கும். இது கார் காலத்தில் பூக்கும்.

சங்க இலக்கியப் பெயர் : கொன்றை
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : கடுக்கை
பிற்கால இலக்கியப் பெயர் : இதழி, தாமம், மதலை, ஆர்க்குவதம்
உலக வழக்குப் பெயர் : சரக்கொன்றை, கொன்றை
தாவரப் பெயர் : காசியா பிஸ்டுலா
(Cassia fistula, Linn.)

கொன்றை–கடுக்கை இலக்கியம்

கொன்றை இலை பல்லலகுடைய கூட்டிலை; இதில் எட்டு முதல் பதினாறு வரையிலான சிற்றிலைகள் காணப்படும். சிற்றிலைகள், சற்று நீண்ட முட்டை வடிவானவை. இம்மரம் முல்லை நிலத்தைச் சார்ந்தது. கார்காலத்தில் பூக்கும். தலைவியைப் பிரியும் கலைவன், இம்மரம் பூப்பதற்கு முன் வருவதாகக் கூறிச் செல்லுதலும், வருந்துணையும் தலைவி ஆற்றியிருத்தலும்,