பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/735

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

719

தண்டு : தரை மட்டத் தண்டு-கிழங்கு-செதில்கள் மூடியிருக்கும்.
இலை : 8 அடி நீளமும், 0.2-1 அங். அகலமும் உள்ள மிக நீண்ட இலை-தட்டையாக இருக்கும்.
மஞ்சரி : கம்பின் கதிர் போன்றது. 12 அங். நீளமும் 0.25-9 அங். குறுக்களவும் உள்ளது. ‘ஸ்பைக்’ என்ற பூந்துணர் பழுப்பு நிறமானது.
மலர் : ஆண் மலர், மெல்லியதாகவும், வெளுத்துப் போயுமிருக்கும்; இணரின் மேலே இருக்கும். பெண் மலர், மலட்டு மலர்களுடன் சேர்ந்து, அடியில் இருக்கும். மலட்டு மலரில், மலட்டுச் சூலகமும், மலரடிச் செதில்களும் கூடியிருக்கும்.
புல்லி, அல்லி வட்டங்கள் : இல்லை.
மகரந்த வட்டம் : ஆண் மலரில் 2-7 தாதிழைகள் உண்டு. பெரிதும் 3 தாது இழைகளில் தாது உண்டாகும். தாதுக் காம்புகள் நுனியில் கம்பியிருக்கும்.
தாதுப் பை : தாதுப்பைகளின் இணைப்பு நீண்டு, தடித்து இருக்கும். தாதுப்பை 4 செல் உடையது. அடியில் ஒட்டியிருக்கும். மகரந்தம் நல்ல மஞ்சள் நிறமானது.
சூலக வட்டம் : பெண் மலர் ஒரு மெல்லிய மடலின் உள்ளே இருக்கும். சூலகம் ஒரு செல் உடையது. சூல்தண்டு நீண்டு, உதிராது இருக்கும். சூல்முடி பிளந்திருக்கும்.
சூல் : தனித்துள்ள தொங்கு சூல்.
கனி : மிக மெல்லியது. விதை-கனிச் சுவரில் ஒட்டியிருக்கும். கரு உருண்டையானது

இதன் நீண்ட இலைதான் ‘சம்பு’ எனப்படும். இதனைக் கொண்டு தட்டிகள், பந்திப் பாய்கள், குடலைகள் முதலியவற்றை வேய்வர்.