பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

47


அகலமாகக் கால் வைத்து, நிலையாக உடலைச் சமப்படுத்தி முன்னும் பின்னும் வேகமாக இயங்குகின்ற ஆற்றல், நல்ல பயிற்சிக்குப் பிறகே கிடைக்கக்கூடிய அரிய பரிசாக அமையும். வினாடிக்கு வினாடி மாறி மாறி நிகழ்ச்சிகள் நடக்கின்ற ஆட்டமாக கபாடி ஆட்டம் அமைந்திருப்பதால், மிகவும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்ச்சியுடனும் இருக்க வேண்டியது மிக மிக முக்கியமாகும்.

ஆக, ஒர் ஆட்டக்காரருக்கு பலரையும் ஒரே சமயத்தில் பார்த்து முடிக்கின்ற பார்வைத் திறன், எப்படியும் உடலை இயக்கி திரும்ப வைக்கின்ற கால் இயக்கம், நினைத்த இடத்திற்கு நினைத்ததை நடத்தி முடிக்கின்ற உடலியக்க ஆற்றல், எந்த நிலையிலும் மனந்தளராத ஊக்க உணர்வு.

சூழ்நிலைகளின் தன்மையை உணர்ந்து, தன்னை பதப்படுத்திக் கொண்டு பக்குவமாக ஆடுகின்ற மனோபாவம், எக்காரணத்தைக் கொண்டும் அமைதியை இழக்காத குண நலன், இவற்றால் ஒரு பாடிச் செல்லும் ஆட்டக்காரர் சிறந்த ஆட்டக்காரராகத் திகழ முடியும்.

அவரால் அவர் பெருமை அடைவது மட்டுமல்ல, அவரது குழுவும் அளப்பரிய பெருமையை அடைகிறது. ஆட்டமும் சிறப்பினைப் பெறுகிறது. வளர்ச்சி அடைகிறது. வானளாவிய மகிழ்ச்சியும் ஆட்டக்காரர் களிடையிலும், ஆடுகின்ற ரசிக்கின்ற பார்வையாளர்களுக்கிடையிலும் நிலவுகிறது என்பதை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும்.