பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



124 26: காளமேகப் புலவரது காலம் - ஆசுகவியால் அகிலவுலகெங்கும் - வீசுபுகழ்க் காளமேகம்' எனவும், 'வசைபாடக் காளமேகம்' எனவும் அறிஞர்களால் புகழ்ந்து கூறப்பெற்றுள்ள காளமேகப் புலவர் பாடிய பாடல்களைப் பலரும் படித்தின்புறுதலை யாண்டுங் காணலாம். இத்தகைய பெருமை வாய்ந்த புலவர் பெருமானது வாழ்க்கையின் வரலாறு நன்கறியப்பட வில்லையாயினும் இயன்ற வரையில் அதனை யாராய்ந்து சிலர் வெளியிட்டுள்ளனர். அங்ஙனம் வெளியிட்டுள்ளோர் நம்புலவர் வாழ்ந்தகாலம் யாது என்பதைச் சிறந்த சான்றுகளுடன் விளக்கினாரில்லை. எனவே, அவர் வாழ்ந்த காலத்தை ஆராய்ந்து துணிதல் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராய்வார்க்குப் பெரிதும் பயன்படும் என்பது திண்ணம். இனி, காளமேகப்புலவர் பாடியுள்ள சிலேடைப் பாடல்களில் திருமலைராயன் என்ற மன்னன் ஒருவன் குறிக்கப்பட்டிருத்தல் யாவரும் அறிந்த செய்தியாகும். அப்புலவர் அவ்வேந்தன் தமக்குச் செய்த பேருதவியைப் பாராட்டிப் பாடிய பாடல் ஒன்று தமிழ் நாவலர் சரிதையில் காணப்படுகின்றது. அஃது, * இந்திரன் கலையா யென்மரங் கிருந்தான் அக்கினி யுதரம்விட் டகலான் எமனெனைக் கருதா வரவெனைக் கருதி நிருதிவந் தென்னையென் செய்வான் அந்தமாம் வருண னிருகண்விட் டகலான் அகத்துமக் களுக்குமப் படியே அநிலமா மரியே யமுதமாய் வருவன் ஆரெனை யிலகிணி லொப்பார் சந்தத மிந்த வரிசையே பெற்றுத் தரித்திர ராசனை வணங்கித் தலைசெயு மென்னை நிலைசெய் -கல்யாணிச் சாளுவத் திருமலை ராயன் மந்தரப் புயனாங் கோப்பைய லுதவு

  • இந்திரன் கலையாய் என்மருங்கிருந்தான் என்பது இந்திரனுக்கு ஆயிரங்கண்களாதலின் நான் கட்டியிருந்குந் துணி ஆயிரம் பீறல்களையுடையது என்றதாம். அக்கினியுதரம் விட்டகலான் என்பது வயிற்றில் பசி நீங்காதென்றதாம். வருணன் இருகண் விட்டகலான் என்பது கண்கள் எப்பொழுதும் அழுது நீரோடிக் கொண்டிருக்கும் என்றதாம். அநிலமாம் அரியே அமுதமாய் வருவன் என்பது வயிற்றுக்குணவு வாயுவே என்றதாம். இப்பாட்டில் இந்திரன் முதலான அட்டதிக்குப் பாலகர் பெயரும். வரிசையாய் வந்தமை 'காண்க.