பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அறிஞர் அண்ணா


ஆண்டி : இப்படி ஜன்னி கண்டவன் போலப் பேசினா நான் என்னான்னு நினைக்கிறது. முரட்டு மாடான்னா அதுக்கும் ஆமாங்கிறே! வெறி நாயான்னா அதுக்கும் ஆமாங்கிறே! கொள்ளைக்காரனுங்களான்னா அதுக்கும் ஆமாங்கிறே நான் என்ன செய்யறது? யார் செய்தா இந்த அக்கிரமத்தை?

பச்சை : அந்தக் கும்பல்தான். ஆளை ஏச்சுப் பிழைக்குதே, அந்தக் கூட்டந்தான்.

ஆண்டி: யாரு? ஐயமாரா?

பச்சை: அந்தப் பாழாய்ப்போன பட்டாச்சாரிக் கூட்டந்தான்.

ஆண்டி: ஏன்? நீ என்ன செய்தே?

பச்சை : நானா? குளிக்கப் போனேன்.

ஆண்டி: எங்கே?

பச்சை : அவுங்க வீட்டுக்காப் போனேன்; குளத்துக்குத் தான். அது புண்ணிய தீர்த்தமாம். அதிலே குளிக்கலாமான்னு பாவிப் பயலுங்க இந்த அநியாயம் செய்துட்டானுங்க.

பச்சை : நீ ஏண்டப்பா அங்கே போகணும்? அதுவோ, ஐயமாரு கொளம்; நாம ஈன சாதி.

ஆண்டி : (கோபத்துடன்) அடே முட்டாளே! போனால் என்னடா! குளத்திலே நாய் தண்ணீர் குடிக்கிறதேடா நாய். நாம் என்ன நாயை விடக் குறைவா? மலம் தின்னும் நாயடா நாம். அது உரிமையோடு தண்ணீர் குடிக்கிறது குளத்தில். பச்சை, நாய்க்கும் கேடு கெட்டவனா? சேற்றிலே புரளுகின்ற எருமை குளித்தால் விரட்டவில்லை. மனிதன் தலைமுறை தலைமுறையாக மற்றவர்க்குப் பாடுபட்டு மேனி கருத்துப் போன சாதி நாம். நாம் குளித்தால் குளம் தீட்டாகிவிடுமா? என்ன அக்ரமம்? அடுக்குமா இந்த அநீதி?