பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

21


சாது : நல்லவனப்பா நீ! கீதத்தைக் கேட்டுவிட்டு கருத்தை கவனியாதிருப்பவரே அதிகம். நீ கவனித்தும் இருக்கிறாய்; ரசித்தும் இருக்கிறாய்!

மோகன் : ரசிக்காமல் இருக்க முடியுமா? புதுமணம் வீச வேண்டும்,நாடு பொன்னாடாக வேண்டும், மக்களின் வாழ்வு மகிழ்ச்சியோடு துலங்க வேண்டும். மதிமிக வேண்டும் என்ற கருத்துக்களை நாட்டுப் பற்றுடைய யார்தான் ரசிக்காமல் இருக்க முடியும்?

சாது : அதிலும் நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ. உன் மனம் மகிழத்தான் செய்யும்.

மோகன் : உயிரைத் துரும்பென்றெண்ணி எண்ணற்ற வீரர்கள். தாயகத்தின் விடுதலைக்காகப் போரிட்டனர். குருதியைக் கொட்டினர். வெற்றியும் கிடைத்திருக்கிறது.

சாது : வெற்றிமேல் வெற்றி கிடைக்கிறது வீரர்களுக்கு....

மோகன் : பெரியவரே! என்ன, ஏதோ சிறு சஞ்சலம்?

சாது : வெற்றியைப் பெற்றுத் தருகிறார்கள். ஆனால் வீணர்கள் விதைத்த விஷப்பூண்டு இன்னும் அழியவில்லையே. ராஜ்யத்துக்கு எதிரிகளால் நாசம் ஏற்படாமல் தடுக்க வீரர்களின் தியாகம் தேவைப்படுகிறது. ஆனால் அந்த வீரத்தையும் தியாகத்தையும் விழலுக்கிறைத்த நீராக்கும் விபரீத காரியம் நடைபெறுகிறதே.

மோகன் : பெரியவரே! என்ன, ஏதாவது சதி நடைபெறுகிறதா?

சாது : ரகசியமாக நடைபெறுவதல்லவா சதி? இது சதி அல்லப்பா, சாதி. அந்த சாதித் தொல்லை உள்ள மட்டும் சமூகத்துக்கு சதா ஆபத்துதானே? வீரப்போர் புரியும் போது தாய் நாட்டவர் என்ற பாசமும், எதிரி வெற்றி பெற்று விட்டால் என்ன செய்வது என்ற பயமும்