பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

23


இருக்கிறாய்; ராஜாவாகி விடுகிறாய் என்று வைத்துக் கொள்! அப்போது நான் சொன்ன ஜாதிச் சனியனை விரட்டப் போரிடுவாயோ?

மோகன் : ஏன் முடியாது?

சாது : பைத்தியம் உனக்கு. நீ ராஜாவானால் உடனே உனக்கு ஒரு ராஜகுமரி வேண்டும். ரத, கஜ, துரக பதாதிகள் வேண்டும். அரண்மனை ஐஸ்வரியங்கள் வேண்டும். அந்தப்புரம் வேண்டும். அழகுள்ள ஆடும் பெண்கள் வேண்டும். ஆலவட்டம் வீச ஆட்கள் வேண்டும். யானை மீது அம்பாரி வேண்டும் என்று இவைகள் மீது அக்கரை பிறக்குமே தவிர ஜாதிபேதத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் வராது.

மோகன் : ஏன் வராது? கட்டாயம் வரும்.

சாது : வராதப்பா.

மோகன் : கட்டாயம் வரும்.

சாது : வராதப்பா வராது. வந்தாலும் ராஜா வேலை உனக்கு நிலைக்காது.

மோகன் : ஏன்?

சாது : ஏனா? உயர்ந்த ஜாதிக்காரர் என்பவர்கள் உன்னை எதிர்த்து ஒழித்தே விடுவார்கள்.... சிவாஜியின் வீரத்தைக்கூட அந்த வீணர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.

மோகன் : பெரியவரே! முன்பு நடந்தது போல் இனியும் நடக்கும் என்று வாதாடுவது முறையாகாது. சிவாஜியின் கண்களிலே இந்தக் கொடுமைகள் தென்படாமல் இல்லை. அவர் தனக்காக, தாய் நாட்டுக்காக உயிர் கொடுத்த உத்தமர்களை உயர்ந்த ஜாதி என்று உரிமை பேசுவோரிடம் அடிமைப்பட விடமாட்டார். அவர் குடியானவர் வகுப்பு. குலப்பெருமை பேசும் கும்பலில் பிறந்தவரல்ல. அவர் சகலரையும் சமமாகவே நடத்துவார்.