பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அறிஞர் அண்ணா


அதிலே நடப்பது கொலைதானே.... இல்லேன்னு சொல்லுவியா?

தர்மன் : அது சரிங்க!

கேசவ : என்ன சரி! இல்லெ தர்மா! யோசித்துப் பேசு. நம்ம ராஜ்யம், நம்ம ராஜா, நம்ம கீர்த்தி இதெல்லாம் இருக்கட்டும் ஒரு புறம். சண்டேன்னா அங்கே மனுஷாளை மனுஷாள் மிருகங்கள் போல எதிர்த்துண்டு சாக அடிக்கிற காரியந்தானே நடக்கிறது. இல்லேம்பியா?

தர்மன் : ஆமா! எவ்வளவோ பேரு மடிஞ்சு போறாங்க.

கேசவ : அப்படின்னா அது கொலைதானே?

தர்மன் : கொலைன்னாலும் நோக்கம் பாருங்க. அது நல்லதுதானே.

கேசவ : நோக்கம் இருக்கட்டும்டா தர்மா. கொலை நடக்கிறதா இல்லையா?

தர்மன் : ஆமாங்க!!

கேசவ : உன் மகன் பட்டாளத்திலே சேர்ந்து, இந்தப் படுகொலையிலே சம்பந்தப்பட்டிருக்கிறான். ஆகையினால் பாவ மூட்டையை உன் குடும்பத்துக்குச் சேர்த்திருக்கிறான். நான் சொல்றேன்னு வருத்தப்படாதே.தர்மா! நீ எவ்வளவோ நல்லவன். இருந்தாலும் உன். மகனாலே உனக்கு நரகவாசம் சம்பவிக்கும்.

தர்மன் : அய்யோ! அப்படிங்களா?

கேசவ : சாஸ்திரத்தைச் சொல்றேண்டா தர்மா. சாஸ்திரம்.

பாலச் : ஏன், ஒய் ! பிரமாதமாகப் பேசுகிறீரே! அதே சாஸ்திரத்திலே, அதே சாபத்துக்கும் பிராயச்சித்தம் சொல்லியிருக்கே.