வீரசேலிங்கம் பந்துலு
௩௧
“இப்போது செய்த போஜனம்“ என்று பந்துலு சொன்னார்.
“சமையல் ருசியாக இருந்ததா?“ என்று பந்துலுவின் மனைவி கோபாலய்யங்காரை நோக்கி வினவினாள்.
“மிகவும் ருசியாக இருந்தது“ என்று கோபாலய்யங்கார் சொன்னார். அந்த சமயத்தில் கோபாலய்யங்காருடைய மனம் அங்ஙனம் ருசியாகச் சமையல் செய்த பெண்ணின் அழகையும், புத்தி நுட்பத்தையும், சொல்லினிமையையுங் குறித்து வீரேசலிங்கம் பந்துலு செய்த வர்ணனைகளைப் பற்றிச் சிந்திக்கலாயிற்று. அவள், உண்மையாகவே அத்தனை அற்புதமான பெண்தானா? அல்லது பந்துலு நூலாசிரியராகையால் வெறுமே கற்பனை தான் சொன்னாரா?“ என்று அவருக்கு ஓர் ஐயமுண்டாயிற்று.
அப்போது பந்துலு தன் மனைவியை நோக்கி, அந்தப் பெண் தன்னுடன் கொண்டு வந்திருக்கும் குழந்தையை இங்கே கூட்டிவா“ என்றார். சரி என்று சொல்லிப் பந்துலுவின் மனைவி சமையலறைக்குள்ளே போனாள்.
அப்போது கோபாலய்யங்கார் வீரேசலிங்கம் பந்துலுவை நோக்கி:— “அந்தப் பெண் அக்குழந்தைக்கு உறவெப்படி? என்று கேட்டார்.
“அந்தப் பெண்ணுடைய தமையனார் மகள் அக்குழந்தை. அவர்களுடைய கதை மிகவும் ரஸமானது. நான் அதை உங்களுக்குப் பின்பு சொல்லுகிறேன். முதலாவது, அக்குழந்தையைப் பார்த்து அதனுடன் சிறிது நேரம் சம்பாஷணை செய்யுங்கள்.