உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪௨

சந்திரிகை

எல்லாம் பசு நெய்யில். இலை போட்டு ஜலந் தெளித்துப் பரிமாறுதல் தொடங்கிவிட்டது. நாலிலை; குழந்தைக்கொன்று; விசாலாக்ஷிக்கொன்று; பந்துலுவுக்கொன்று; கோபாலய்யங்காருக்கொன்று. பந்துலுவின் மனைவி பரிமாறுகிறாள்.

பந்துலுவும் கோபாலய்யங்காரும் வந்து முதலாவதாக உட்கார்ந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் விசாலாக்ஷியும் குழந்தையும் வந்து உட்கார்ந்தனர். போஜனம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறிது நேரம் கழிந்தவுடனே கோபாலய்யங்கார் விசாலாக்ஷியை நோக்கி:— “விசாலாக்ஷி எங்கே?” என்று கேட்டார். இவள்தான் விசாலாக்ஷி யென்பது அவருக்குத் தெரியாது. பணிப்பெண்ணையும் குழந்தையையும் ஒன்றாக நோக்கியது முதலாக அப்பணிப் பெண்ணே விசாலாக்ஷி என்ற பிராந்தியில் அவர் மயங்கியிருந்தார்.

“நான்தான் விசாலாக்ஷி” என்றாள் விசாலாக்ஷி.

“நீயா விசாலாக்ஷி?” என்றார் கோபாலய்யங்கார்.

“ஆம்” என்றாள் விசாலாக்ஷி.

“காலையில் இக்குழந்தையுடன் சோலையில் விளையாடிக் கொண்டிருந்த பெண் யார்?” என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

“அவள் இக்குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கவில்லை. இந்தக் குழந்தைக்குக் காவல் காத்துக் கொண்டிருந்தாள். அவள் பந்துலு வீட்டு வேலைக்காரி” என்று விசாலாக்ஷி சொன்னாள்.