உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீரசேலிங்கம் பந்துலு

௪க

பெயர் பிராந்தி. அந்த பிராந்தி என் உள்ளத்தில் எழக்கூடியதன்று. அவ்வித மயக்கங்கள் தோன்றாதபடி என் உள்ளத்தை நான் நன்றாகத் திருத்திப் பண்படுத்தி வைத்திருக்கிறேன். காதலென்பது தேவலோகத்து வஸ்து. இவ்வுலகத்துக்கு வாழ்க்கை மாறியபோதிலும் அது மாறாது. ஸாவித்திரியும் ஸத்யவானும்; லைலாவும் மஜ்னூவும்; ரோமியோவும் ஜூலியெத்தும் கொண்டிருந்தார்களே, அந்த வஸ்துக்குக் காதலென்று பெயர். அது அழியாத நித்ய வஸ்து. ஹிமயமலை கடலில் மிதந்தபோதிலும், காதல் பொய்த்துப் போகாது. அத்தகைய காதல் நான் அந்தப் பணிப்பெண் மீது கொண்டிருக்கிறேன்” என்று அய்யங்கார் சொன்னார்.

செவிடன் காதில் சங்கூதுவது போல் வீரேசலிங்கம் பந்துலு பலபல நியாயங்கள் கூறி அந்தப் பணிப்பெண் மீது கோபாலய்யங்கார் கொண்டிருக்கும் மையலை அகற்றிவிட முயற்சி செய்தார். இவர் பாதி பேசிக் கொண்டிருக்கும்போதே கோபாலய்யங்கார் கொட்டாவி விடத் தொடங்கி விட்டடார். அவருக்குப் பந்துலுவின் வார்த்தைகளில் ருசியில்லை. இதையுணர்ந்த பந்துலு:— சரி இந்த விஷயத்தைக் குறித்து விஸ்தாரமாக நாளைக்குக் காலையில் பேசிக்கொள்ளலாம். இப்போது நித்திரை செய்யப் போவோம்“ என்றார்.

அப்போது கோபாலய்யங்கார்:— அங்ஙனமே செய்வோம். ஆனால் தூங்கப் போகுமுன் தாங்கள் தயவு செய்து எனக்கொரு விஷயந் தெரிவிக்க