பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

எல்லாம் கண்டு கதறிய உள்ளம், அதே மாதிரி ஒரு காலத்திலே கழுவினிலே ஏற்றப்பட்டார்கள் சமணர்கள் என்ற செய்தியைக் கேள்விப்படுகின்றபொழுது அதை மனிதகுலத்தின் நாகரிகமாக நம்மால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

சமணர்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டார்கள். சிதைக்கப்பட்டார்கள். அதற்கு அடிப்படையான காரணம் என்ன? இங்கே தமிழர்களிடத்திலே ஒரு பெரிய புரட்சி தோன்றியது. வேத வேள்வியினுடைய எதிர்ப்பின் நெருப்பாகத் தோன்றியவர்கள் மீது அவர்கள் அன்னியர்கள் என்றும் அவர்கள் வேண்டாதவர்கள் என்றும் பழி சொல்லப்பட்டது. அவர்களை அழிப்பதற்குரிய, ஒடுக்குவதற்குரிய, முயற்சிகள் இங்கே நடந்தன என்று அறிய நேர்கிறது. ஆழ்வார்களும் நாயன்மார்களும்கூட, பாடிய பாடல்களை நான் பார்த்தபோதுதான், சமணர்களுக்கு, பெளத்தர்களுக்கு, இங்கு எத்தனை விதமான எதிர்ப்பிருந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. நான் நம்பவில்லை. ஆழ்வார்களும் நாயன்மார்களும் அப்படி எல்லாம் பாடக் கூடியவர்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால் பாடியிருக்கிறார்கள். இன்றைக்கும் கட்சிகள் ஒன்றையொன்று அடித்துக் கொள்கிற மாதிரி மதங்கள் ஒன்றையொன்று நன்றாக அடித்துக் கொண்டிருக்கின்றன. அதிலே அடிபட்டவர்கள் சிலர் வெளியே சொல்லியிருக் கின்றார்கள் சிலர் சொல்லாமலே போயிருக்கிறார்கள். ஆனால் பல பேர் வருந்தியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. தொண்டரடிப்பொடி ஆழ்வாருடைய பாடல் ஒன்று சமணர்கள் எப்படி நசுக்கப்பட்டார்கள் என்பதற்குச் சான்றாக நிற்கிறது. சமணர்களை எப்படி நசுக்க வேண்டும் என்பதற்கு இவர்களே, விதை விதைக்கிற போக்கை இந்தப் பாடலிலே நான் பார்க்கிறேன்.