பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

“வெறுப்போடு சமணர் குண்டர் விதியில் சாக்கியர் தலையை ஆங்கே
அறுப்பதே தருமம் கண்டாய் ஆனந்தமா நகர் வாழ் வானே!”

என்று சொல்லி ஆண்டவனுக்கு ஒரு விண்ணப்பம் கொடுக்கிறார். ஆண்டவனே, நான் அவர்களுடைய தலையை அறுக்க வேண்டும். சாக்கியர்களை அறுக்க வேண்டும். நான் சமணர்களை அறுக்க வேண்டும். அப்படி நான் அறுக்காதிருந்தால், அந்தப் பணியினைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உன்னுடையது என்று சொல்லி தொண்டரடிப்பொடியாழ்வார் பாடுகின்ற பாடலைப் பார்க்கின்றபொழுது, எனக்குச் சமணர்கள் மீது பெரிதும் பரிதாபம் ஏற்பட்டது, அதுமட்டுமல்ல, வேள்வி, வேதம் இவற்றையெல்லாம் எதிர்த்து ஒரு அறிவுப் புரட்சி செய்த காரணத்தினாலேதான், அவர்கள் இங்கே தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டபோது என் நெஞ்சில் பெருத்த வேதனைகள் ஏற்பட்டன. ஒரு காலத்திலே இங்கே சுதந்திரப் போராட்டம் நடந்தது. அந்த சுதந்திரப் போராட்டத்துக்குப் பின்னாலும்கூட, இந்த சமணர்களுக்குப் பின்னாலே வேத வேள்விக்கெதிரான எதிர்ப்பின் நெருப்பு இருந்தது மாதிரி, அந்தப்போராட்டத்திற்குப் பின்னாலும் வேறுபல செய்திகள் இருக்கின்றன என்பதை, அந்த வரலாற்றைக் கூர்மையாகப் பார்க்கின்றபொழுது அறிந்து கொள்ள முடிகிறது.

திருஞானசம்பந்தர் போன்றவர்களும் சமணர்களைக் கடுமையாகச் சாடிப் பாடியிருக்கிறார்கள். இழிவுபடுத்தத் தூண்டியிருக்கிறார்கள் என்பதை அவர் தம் பாடல்கள் மூலமே நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.