பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

முனிவருக்கு அறை கூவல் விடுகிறான். கள்வெறியனின் பிதற்றிலிலும் அவனது உள்ளக் கிடக்கையை, நக்கல் கொக்கரிப்பை ஒளிப்படம் பிடித்துக் காட்டுவது போல் தெளிவாகத் தீட்டுகிறார் சாத்தனார்.

மற்றொரு காட்சி பித்தனின் பிதற்றல் காட்சி தெருவிலே எருக்க மாலை அணிந்து சிதைந்த கந்தைத் துணியுடன் பண்பற்ற பேச்சுப் பேசி ஓடுகிறான் ஒரு பித்தன். பாவம் பைத்தியம்! மனக் கோட்டமுடைய கோட்டிக்காரன்! அவன் மனத்திலே தொடர்பற்ற, பொருத்தமற்ற ஒன்றிற்கொன்று முரணான உணர்ச்சி அலைகள் எழுந்து விழுந்து மறைகின்றன. நீர் மேல் குமிழி போன்று அவை திடீரெனக் கொப்பளித்து ‘படீர்’ என வெடித்துவிடுகின்றன. பித்தனது இந்த நிலையற்ற மனநிலையை, உளவியல் மருத்துவர் போல் படம் பிடித்துக் காட்டுகிறார். சொல்லேர் உழவர் சாத்தனார். அவர் தெரிந்தெடுத்துப் பயன்படுத்தும் சொற்களே, ஒலிகளே, ஓசைகளே. அவற்றின் விகுதிகளே அளபெடைகளே, கிறுக்கன் எழுப்பும் ஒலிகளைக் காட்டி நம் உள்ளங்களிலே அவன் மேல் இரக்கத்தை எழுப்புகின்றன.

“அழுஉம் விழுஉம் அரற்றும் கூஉம், தொழுஉம் எழுஉம் சுழலலும் சுழலும் ஓடலும் ஓடும் ஒரு சிறை ஒதுங்கி நீடலும் நீடும் நிழலொடும் மறலும் மையல் உற்ற மகன்”.

ஓடுகின்றவன் காரணம் தெரியாத அச்சத்தினாய் வீதியோரத்திலே ஒதுங்குகிறான். அங்கே தனது நிழலைக் காண்கிறான். உடனே அச்சம் மறைந்து காரணமின்றிச் சினம் எழுகின்றது. ஆகவே, தன் நிழலைப் பகைவனாகக் கருதுகிறான். இவ்வாறு பித்தனின உள்ளத்தில் காரணமின்றி, தொடர்பின்றி, முன்பின் முரணாக எழும் உணர்ச்சிகளை எத்துணை உளவியல் திறத்தோடு காட்டுகிறார் சாத்தனார் எனபதைப் பாருங்கள்.