பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

காட்டில் வேடன் ஒருவனின் வலையில் பெண்மான் ஒன்று அகப்பட்டது. நபிகள் நாயகம் அம்மானைக் கண்டு வருத்தமுற்றார் அம்மான் நபிகளிடம் “யா றசூல்! இம் மலைச் சாரலில் என் ஆண்மானுடன் அண்மையில் ஈன்ற கன்றுடனும் இனிது வாழ்ந்தேன். ஒரு வேங்கையின் கர்ச்சனையைக் கேட்டு நாங்கள் அஞ்சித் தறிகெட்டுச் சிதறினோம்! நான் இவ்வேடன் வலைப்பட்டேன்! இவ்வேடனால் கொல்லப்படுவது குறித்து நான் வருந்தவில்லை. அவனுடைய பசிப்பிணியைத் தீர்க்கும் வகையில் மரண மடைவதில் புண்ணியமுண்டு. ஆனால் என் ஆண்மான் எங்கு ஓடித் திரிந்ததோ! நானின்றி அது புல்லும் நீரும் அருந்தாது மேலும் நான் கன்றையீன்று மூன்று நாட்களேயாயின நான் சென்று என் கன்றைக் கண்டு பாலூட்டி, என கலையையும், கன்றையும் இனத்தோடு சேர்த்துவிட்டு திரும்ப வந்து இந்த வேடனுக்கு இரை யாவேன்” எனறது. இது கேட்ட முகம்மது மானை விடுவிக்குமாறு வேடனிடம் கூற, அவனோ கல்லும் முள்ளும் தைக்கக் கடும்பாடுபட்ட இதனையா விடுவேன்! சென்ற மான் திரும்பி வருவதும் உண்டா என்றான். பெருமானாரோ இம்மான் வராவிட்டால் நான் உனக்கு இரண்டு மான் தருவேன். அதுவரை நான் இம்மானுக்குப் பிணையாக நிற்பேன் என்றார். மானை வேடன் அவிழ்த்து விட்டான். அது ஓடோடிச் சென்று தன் கலையைக் கண்டது; குட்டிக்கு வயிறாறப் பாலூட்டியபின் தான் வேடனிடம் செல்ல வேண்டியிருப்பதைக் கூறியது. தப்பிய நீ மீண்டும் போவதா கூடாது என இன மான்கள் தடுத்தன எனக்காக ஒருவர் பிணை நிற்கிறார்; அவரை ஏமாற்றின் கொடிய நரகம்தான் எனக்குக் கிட்டும், எனச் சொல்லியது. அப்பெண்மான் திரும்பியபோது அதன் கன்றும் தானும் உடன் வருவதே முறையென வந்தது. நபிகள் நாயகம் "இதோ பார்! ஒன்றுக்கு இரண்டு மான்கள் உன்னிடம் வருவதை" என்றார். வேடன் மனம் திருந்தி ஈமான் கொண்டு இசுலாத்திற் சேர்ந்தான் இதனை உமறு.