பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

இன்றைய கவிஞர் முகம்மது மைதீன் தம் நாயகப் பேரொளியில்,

வில்லை அறியாதான் வேட்டைக்குச் சென்றாற்போல்
சொல்லை அறியாதான் சோடித்த கவிதையிது

என அவையடக்கம் கூறுவார்.

இஸ்லாமியப் புலவர்கள் பெருங்காப்பியங்கள் மட்டுமின்றி இடைக்கால இலக்கியப்போக்கான சிற்றிலக்கிய வகை அனைத்தையுமே பாடியுள்ளனர். இஸ்லாமிய அந்தாதி, பிள்ளைத்தமிழ், மாலை, கோவை, சதகம், அம்மானை, குறம், கோவை, பள்ளு, நூல்கள் ஏராளம் உள்ளன.

இசைப் பாடல்களான திருப்புகழ், சிந்து, கும்மி, தாலாட்டு ஆகியவற்றிலும் தனிக்கவனம் செலுத்தியுள்ளனர்.

அருணகிரியார் திருப்புகழையொட்டி காசிம் புலவர் தம் திருப்புகழைப் பாடியுள்ளார். புலவர் திருப்புகழ் புனைவதில் ஈடுபட்டிருந்தபோது தோட்டத்தில் அணில் ஒன்று துள்ளி விளையாட அது கண்ட அவர் மனைவியார் அவ்வணிலின் துள்ளலுக்கேற்பப் பாட முடியுமா என்று கேட்டாராம். உடனே கவிஞர்.

தத்தத்தத் தத்தத் தத்தத்-தனதான

எனும் சந்தத்தில்

கொத்துக்கட் பச்சைப் பிச்சித்
தட்பப்புட் பத்திற் றத்தக்
குப்பிப்பொற் குச்சுக் கற்றை-குழல்தாழி

எனப் பாடினர் என்பர். பல்வேறு சந்தங்களில் அல்லாஹ்வினுடைய, நபிகள் நாயகத்தினுடைய அருளை வேண்டிப்பாடுவது அற்புதமானது.