பக்கம்:சமணமும் தமிழும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

௪. ஆருகதரின் இல்லற ஒழுக்கம்

 

“பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே”

என்று திருத்தக்கதேவர் தாம் அருளிய நரிவிருத்தத்தில் கூறியதுபோல, சமணசமயத்தில் இல்லறம் துறவறம் என இரண்டு அறங்கள் மட்டும் கூறப்படுகின்றன. சமணர்கள் இவ்வறங்களில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். சமணரின் துறவற ஒழுக்கத்தை மேலே பதிதர்மம் என்னும் அதிகாரத்தில் கூறினோம். ஈண்டு சாவகர் (சிராவகர்) எனப்படும் இல்லறத்தார் ஒழுக வேண்டிய ஒழுக்கத்தைக் கூறுவோம்.[1]

இல்லறத்தில் ஒழுகும் சமணர் ஒவ்வொருவரும் கீழ்க்கண்ட பத்து விரதங்களைக் (ஒழுக்கங்களைச்) கடைப்பிடித்துத் தவறாது ஒழுக வேண்டும் என்று சமண நூல்கள் கூறுகின்றன. அவையாவன: 1. கொல்லாமை, (அகிம்சை) 2. பொய்யாமை (பொய் பேசாதிருத்தல்) 3. கள்ளாமை (களவு செய்யாதிருத்தல்) 4. பிறன் மனை


  1. தேவாரம் நாலாயிரப் பிரபந்தம் பெரியபுராணம் திருவிளையாடற் புராணம் முதலிய சமண சமயமல்லாத நூல்களை மட்டும் படித்தவர், சமணர் என்றால் ஆடையின்றி அம்மணமாக இருப்பார்கள் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையிலே யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழர் ஒருவர், சைவசமய நூல்களை நன்கு கற்றவர், சென்னையில் இந்நூலாசிரியரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது, “இப்போது சமணர்கள் இருக்கிறார்களா? உடை உடுத்தாமல் அம்மணமாகத்தானே இருக்கிறார்கள்?” என்று கேட்டார்.
    “நீங்கள் பெரியபுராணம் திருவிளையாடல் புராணம் தேவாரம் முதலிய நூல்களைப் படித்திருப்பதனால் இவ்வாறு சொல்லுகிறீர்கள். அந்நூல்களில் கூறப்பட்ட சமண சமயத்துறவிகள் மட்டுந்தான் அம்மணமாக இருப்பார்கள். அதிலும், மிக உயர்ந்த நிலையையடைந்த துறவிகள் மட்டும் அவ்வாறு இருப்பார்கள். மற்றைய இல்லறத்தார் ஆணும் பெண்ணும் நம்மைப்போன்றுதான் உடை உடுத்து இருப்பார்கள்,” என்று கூறியபோது அந்த நண்பர், “அப்படியா,” என்று அதிசயப்பட்டார்.