பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
என்னுரை

தமிழனுக்கென ஓர் தனிப் பண்பு உண்டு, அதுதான் யார்? 'என்றுபாராது' 'என்ன என்பதில்'? மட்டும் கருத்தூன்றும் தனிப்பெரும் பண்பு. 'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்ற சிந்தனை வளமிக்கவர்கள் தமிழர்கள்.

தமிழகத்திற்கு வட புலத்திலிருந்தும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு சமயங்சள் வந்தன. வைதீக சமயம், சமணம், பெளத்தம் முதலான சமயங்கள் வட நாட்டிலிருந்தும் கிறிஸ்தவம், இஸ்லாம் முதலான சமயங்கள் வெளிநாட்டிலிருந்தும் வந்தன. இச்சமய நெறிகளை யார் கொண்டு வந்தார்கள் என்பதைப் பாராது. அச் சமயங்கள் என்ன கூறுகின்றன என்பதில் கருத்தைச் செலுத்தினர். விரும்பியோர் அதன் நெறியைப் பின்பற்றினர் என்பது வரலாறு. இச்சமயங்கள் அனைத்தும் தமிழின் வாயிலாகவே தம் கருத்துக்களை வெளிப்படுத்தின. இதன்மூலம் சமயங்களும் வளர்ந்தன தமிழும் வளர்ந்தது. எனவேதான் தமிழைப் புகழவந்த பாரதி "சமயந்தொறும் நின்ற தையள்" எனப் பாராட்டினார்.

பிற சமயங்கள் தமிழகம் வந்ததால் தமிழில் பலதரப்பட்ட சமய தத்துவக் கருத்துக்கள் அழுத்தமாகப் படியத் தொடங்கி, தமிழ் மக்களின் சிந்தனையிலும் செயலிலும் புதிய புதிய மாற்றங்களுக்கு வழிகோலின. இத்தகைய மாற்றங்கள் தமிழனின் வாழ்வில் மட்டுமல்லாது அவனது மொழியாகிய தமிழிலும் எதிரொலித்தன என்பது இலக்கிய வரலாறு உணர்த்தும் உண்மையாகும்.