பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10 தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 வல்லாண்மை மிக்க தாவரங்கள், வல்லாண்மையில்லாத தாவரங்களை அழித்து வாழும். “வல்லாண்மையே வாழும்” என்ற நியதி தாவரங்களுக்கும் உண்டு! இன்றைய சமுதாயம் காடு போலத்தான் விளங்குகின்றது! பழத்தோட்டம் போல் அல்ல!

வைத்த பழத்தோட்டத்தில் ஒழுங்கு இருக்கும்! எல்லாம் வாழும்! அழிப்பு இல்லை! பழத்தோட்டம் போன்ற சமுதாய அமைப்பே, மறுமலர்ச்சி இலக்கியப் படைப்பாளிகளின் நோக்கம்!

மானிட சமுதாயம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன! மானிட சாதியின் வரலாறு, வற்றாத ஜீவநதியாக ஓடிக் கொண்டே யிருக்கிறது! இனிமேலும் ஓடும்!

இந்த வரலாற்று ஆற்றில் அருமையான தெள்ளிய நீரும், சில சமயங்களில் செங்குருதியும், சில சமயங்களில் சாக்கடையும் ஓடும்! ஏன்? சில சமயங்களில் ஓடும் சாக்கடையில் குப்பையும் கூளங்களும் சேரும்பொழுது ஓடமுடியாமல் தேங்கி நிற்பதும் உண்டு இந்த மாதிரியான சூழ்நிலைகளில் வரலாற்றை, அதன் தேக்கத் தன்மை அறிந்து மாற்றி இயக்குவதை “மறுமலர்ச்சி” என்று வரலாற்றாசிரியர்கள் புகழ்வர்.

மானிட சமுதாயம் பழக்கங்களுக்கும் வழக்கங்களுக்கும் கட்டுப்படும் இயல்பினது. அதன் காரணமாக ஒரு கட்டத்தில் திரும்பத் திரும்பச் சுற்றுவது தேக்கம். இத்தேக்கத்தை உடைத்து மானிடம் சுற்றும் வட்டத்தை விரிவாக்குவது மறுமலர்ச்சி இலக்கியத்தின் தன்மை!