பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

சமுத்திரக் கதைகள்


திருவாங்கூர் சமஸ்தான மன்னரைப் பற்றிய அலங்கார வார்த்தைகளுக்கு உச்ச சத்தமாய் முரசொலித்தும், ஒவ்வொரு அறிவிப்புக்கும் மூன்று தடவை டும் போட்டும், இறுதியில் டமர... டகர... டக்கா என்று பீதியை ஏற்படுத்தும் அதிகார தாளத்தோடு அடிக்கப்பட்ட தமுக்குச் சத்தம் அந்த குக்கிராமத்திற்குள் அசரீரி குரலாய் ஒக்கலித்தது.

ஆறடி உயரமுள்ள அய்ம்பது, அறுபது பனையோலை குடிசைகள் எதிர் எதிராய், வரிசை வரிசையாய் இருந்தன. இந்த வரிசைகளுக்குப் பின்னால் மேலும் அடுக்கடுக்கான குடிசை வரிசைகள், ஊராய்க் காட்டின. ஒவ்வொரு குடிசையின் மண் சுவரும், இன்னொரு குடிசையின் சுவராயிற்று. இந்த இருபக்க குடிசை வரிசைக்கும் இடையே சுயம்பாக ஒரு குறுகிய தெரு ஏற்பட்டது.

இந்தக் குடிசை வரிசைகளுக்கு மேல்பக்கம் உள்ள திட்டில் முக்கோண வடிவத்தில் சுண்ணாம்பு பூச்சு இற்றுப் போய் செம்மண் சுவராக நின்ற கள்ளிமாடன் பீடத்திற்கு முன்னால் வம்படி, வழக்கடியாய் பேசிக்கொண்டிருந்த அத்தனை ஆண்களும், பீதியோடு குரல் வந்த திக்கை எட்டிப் பார்த்தார்கள். அவர்கள் தத்தம் வரிபாக்கியை நினைத்தும், ஊழியம் செய்ய வேண்டிய கட்டாயம் குறித்தும், கலங்கிப்போய் ஒருவர் முகத்தை ஒருவர் ஆறுதலாக பார்த்துக் கொண்டார்கள். அப்போது தோள்வரை நீண்ட காதுகளில் அவர்கள் போட்டிருந்த ஈயக்குண்டலங்கள், அவர்களது பீதியை வெளிகாட்டுவதுபோல் மேலும், கிழுமாய் ஆடின. காதுகளை ஆட்டுவித்தன.

ஊழியம் என்றால் கூலி இல்லாத ஒசி வேலைகள். முகாமிடும் மன்னரின் யானைகளுக்கு தென்னை ஒலைகளை வெட்டி, கட்டுக் கட்டாக சுமந்து செல்ல வேண்டும். குதிரைகளுக்கு, கொள்ளு கொண்டு போக வேண்டும். ஆங்காங்கே உள்ள நதி சுருங்கிய காயல்கள் எனப்படும் குளங்களை துர்வார வேண்டும். மன்னரின் பரிவாரங்களுக்கு தேங்காய்கள், நுங்குகள், பனங்கிழங்குகள், பயிர் வகைகள் முதலியவற்றை காணிக்கையாக்க வேண்டும். உப்பளங்களில் இருந்து உப்பு மூட்டைகளை சுமந்துபோக வேண்டும்.