பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

சமுத்திரக் கதைகள்


எங்கே போவது என்று புரியாமல், அவள் மலங்க மலங்க விழித்தாள். இயல்பான உயிர்ப் பயம், அவளை நான்கு பக்கமும் திரும்ப வைத்தது. தற்செயலாக, அந்த பக்கமாக வந்தவர்களைப் பார்த்து, பயத்தை பயமுறுத்தலாக்குவதுபோல், கைகளையே ஆயுதங்களாய் வளைத்து, பற்களை வெளிப்படுத்தி, முள் மரமாய் நின்றாள்.

காரணமும் புரியவில்லை, காரியமும் தெரியவில்லை, மயக்கமா, கிறக்கமா, மரணமா, அப்போதைய பிறப்பா... ஆடி அடங்கிய வாழ்வா, அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. உயிர் நிற்க, உடல் போன நிலைமை... உடல் இயங்க உயிர் போன கொடுரம்.

அவள், சிறிது சிறிதாக ஒரளவு சுயத்திற்கு வந்தாள்.

எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் போய்விட்ட ஆத்திரம். இந்த நிலைக்கு காரணமான அத்தை மகனை, ராத்திரியோடு ராத்திரியாய் போய் ஒரே வெட்டாய் வெட்ட வேண்டும் என்ற வேகம். அதே சமயம், திசை அறியாத சோகம்.

எந்த திசையும் விளங்காமல், எதிர் திசையில், அவள் நடந்தாள். திக்கற்ற நடை... கால்களே மூளையை ஆட்டி வைக்கும் கட்டாயம். இதயம், வேகவேகமாய் அடித்தடித்தே நிற்கப்போவது போன்ற தோரணை.

ராசம்மாவை, அவள் கால்கள், கோட்டாறு சந்தைப் பக்கமாக இழுத்துக் கொண்டு வந்தன. அந்த சந்தைக்குள் நடந்த அடிதடிகள் அவளை நின்ற இடத்திலேயே நிற்க வைத்தன. அந்த குடிசைப் பக்கம், கிறிஸ்தவ பெண்கள் தோள்சிலைப் போட உரிமைக் கேட்டு போராடிவருவதாக புராணக் கதைபோல் கேள்விப்பட்டது, அவள் நினைவுக்கு வந்து, அவளை பாதி உயிர்ப்பித்தது. அந்தச் சண்டைச் சந்தையைப் பார்க்க வைத்தது.

வெள்ளையும், சொள்ளையுமான மனிதர்கள் ஒரு பக்கமும், தோள்சிலை பெண்களோடு நின்ற அழுக்குத் துணிக்காரர்கள் இன்னொருப் பக்கமுமாய் அணிவகுத்து ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்கள். கல்லெறியும், சொல்லெறியும் ஒருங்கே