பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VII

பாமர மேதை என்ற கதையிலும் மூலம் போன்றதொரு கட்டுடைப்பு - கொஞ்சம் கிண்டலும் வேதனையும் கலந்ததாக ஒரு விஞ்ஞானியின் மனைவியின் ஏக்கம் தோய்ந்த கரிசனை, ஆராய்ச்சியில் தன் நிலை மறந்த விஞ்ஞானியின் நிபுணத்துவ மிக்க கையாலாகாத்தனம் (Potent impotency), மூத்தாரின் அதிகாரத்தோரணைக்குள் மறைந்து கிடக்கும் 'டுப்ளிகேட்' தன்மை என அறிவியலையும் குடும்பவியலையும் இணைத்து ஆடும் விளையாட்டாகக் கதை அமைந்துள்ளது.

சிலந்திவலை துணிச்சலாகத் தொடங்குகிறது. இரத்தத்தால் சிவப்பு அடிக்கப்பட்டது போன்ற காவல் நிலையம் அது அதற்குள் நடக்கும் போலீஸ் தர்மத்தை நிர்த்தாட்சண்யமாக விவரிக்கிறது கதை. ‘மாமூலும் தொடர்ந்து கொடுக்கனும், மாமா வேலையும் செய்யனும், மெமோவுக்கு மேல மெமோவும் வாங்கணும். இதுதான் சிலந்தி வலைக்குள் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர்களின் நிலை, பாவம், இப்படி “அசோகச் சக்கர அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படும் சப்-இன்ஸ்பெக்டர்களின் கோபம் இயல்பாகவே தம்மிடம் அகப்படும் அப்பாவிக் குற்றவாளிகள் மீது திரும்புகிறது என்பதையும் நாசூக்காகக் கதை சொல்லி முடிக்கிறது.

அகலிகைக் கல் நகர்ப்புற ஆயா ஒருவரின் வாழ்க்கையில் நிகழும் ஒரு சாம்பிள் நிகழ்வு. அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் ஒரத்தில் ஒசியாய் வசித்துக்கொண்டு, அங்குள்ள அறுபது வீடுகளுக்குப் பால்வாங்கித் தந்து பிழைப்புநடத்துபவர். அவருக்கென்று ஒரு வாழ்க்கை இருந்தது. குடும்பம் இருந்தது. வீடும் இருந்தது. அத்தனையும் தொலைந்த நிலையில், தன்னைத் தொலைத்து விடாதவர் ஆயா. இதனால்தான், மனிதர்களின் மெல்லிய உணர்வுகளையும் அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. நேரங்கெட்ட நேரத்தில் கதவைத் தட்ட மனசு கேட்கமாட்டேன் என்கிறது.