பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 எனது முதல் படைப்பு

நல்லசிவம் தலைமைத் தாங்கவேண்டும் என்றான். உடனே பெண் வீட்டுப் பிள்ளையாண்டான் ஒருவன் இன்னொரு கட்சித் தலைவர் வெண்சாமரம் தலைமை தாங்க வேண்டும் என்றான். மாப்பிள்ளை பங்காளிகள், வெண்சாமரம் திருடன், அவன் கருமாந்திரத்திற்குத்தான் லாயக்கு என்றார்கள். பிள்ளை வீட்டார் சொன்னது நல்லார் கட்சி நல்லசிவத்திற்கே பொருந்தும் என்றனர் பெண் வீட்டுப் பங்காளிகள் வார்த்தைகள் தடிக்கின்றன. பிரச்சனை கெளரவப் பிரச்னையாகியது. தலைவர்களைத் திட்டிய பங்காளித் தொண்டர்கள் பிறகு ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்கிறார்கள். இரண்டு தலைவர்களும் வராமலே கல்யாணத்தை நடத்தலாம் என்று அய்யாசாமி தாத்தா சொன்னது மற்றவர்களின் காதில் விழுந்ததே தவிர, கருத்தில் விழவில்லை. நிலைமை அந்த அளவிற்குப் போனது.

மாப்பிள்ளை வீட்டார் போய்விடுகிறார்கள். அமுதா வீட்டுக்குள்ளேயே அழுகிறாள். காதலை மறக்க முடியாமலும் கல்யாணத்தை நினைக்க முடியாமலும் போன சண்முகம், இராணுவத்தில் சேர்ந்து தொலை தூரத்திற்குப் போய் விடுகிறான். ஒருமாதம் கழித்து எல்லாப் பத்திரிக்கைகளிலும் ஒரு பெரிய செய்தி வருகிறது. கிராமத்து மக்கள் அதைப் படித்துவிட்டு விக்கித்துப் போகிறார்கள். செய்தி இதுதான்.

‘தலைவர் வெண்சாமரத்தின் மகளுக்கும், தலைவர் நல்லசிவத்தின் மகனுக்கும் திருமணம். சர்வகட்சித் தலைவர்கள் வாழ்த்து.’

இந்தச் சிறுகதை விரைவில் பிரசுரமாகும் என்று ஆனந்த விகடன் பத்திரிகை கடிதம் எழுதிய நாளிலிருந்து பிரசுரமாகும் நாளை எதிர்பார்த்திருந்தேன். மாதக்கணக்காக கதை பிரசுரமாக வில்லை. பிறகு நானே சலித்துப் போயிருந்த ஒருநாளில், டில்லியின் வி.ஜி.பி.யான பாக்யராஜ், “நீங்கதானே சமுத்திரம்” என்றார். எனக்கு ஆச்சர்யம். ஒரளவு பரிச்சயமான நண்பர். பெயர் தெரியாமல் போகுமோ? நான் அவரை நெருங்கியபோது இது உங்க கதையா? என்று பத்திரிக்கையைப் பிரித்துக் காட்டினார். நான் ஒரு கதை எழுதியிருக்க முடியாது என்று எப்படி அவருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டு, அதுவே என் பெயரையே சந்தேகிக்க வைத்ததோ, அதுபோல் எனக்கும் ஒரு சந்தேகம். நம் கதைதானோ? நம் பெயர் தானா? என்று, சந்தேகமில்லை. என் கதைதான். என் பெயர்தான்.