பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

________________


கழுத்துக் குறுகியதாகிய குடம் அந்த நிலையில் “இல்லை” என்றும் கூறுவதில் முரண்பாடு இல்லை. எனவே "குடம் உண்டு; குடம் இல்லை" என்று இவ்வாறு நோக்க வேறுபாடுகளால் ஒரு பொருளைப்பற்றியே கூறுவது உளறல் அன்று; உண்மையைக் கூறலேயாம்.

மற்றொரு விளக்கமும் இங்குத்தருதல் வேண்டும். உள்ளது என்றால் என்றும் மாறாதது என்றும், அழியாதது என்றும் பொருள் கொள்வோர் ஒருவகையினர். உள்ளது என்பதெல்லாம் இமைக்கிமை மாறி அழிவதே ஆதலின், உள்ளது என்பதே இல்லை என்பது மற்றொருவர் கொள்கை. சமணர்கள் இந்த இரண்டினையும் உடன்படாது நடுநிலையில் நிற்பதாகத் தம்மைப் புகழ்ந்து கொள்வர். பொருளின் உண்மை இயல்பு ஒன்று; அதன் இருப்புவகை மற்றொன்று. பொருளின் இயல்பே உண்மைத் தன்மை. அது என்றும் நிலைபேறுடையது. ஆனால், அதன் வகை அல்லது இருப்பு நிலை ஒன்றாக இல்லாமல், தோன்றியும் அழிந்தும் மாறிக் கொண்டே நிற்கும். தீயின் சுடர் இமைக்கிமை தோன்றி அழிந்தாலும், அங்கு ஓர் அடிப்படையாம் உண்மைத்தன்மை விளங்குகிறது. அழிவும் தோற்றமும் இருப்பு நிலையின் வகைகள். ஆனால், அவை எதன் இருப்பு நிலையோ. அதுவே உண்மைத தன்மையாம். தோற்றமின்றி அழிவில்லை; அழிவை நோக்காதபோது தோற்றமில்லை; இவை இரண்டுமே, அடிப்படையான உண்மைத்தன்மை இல்லாதபோது இல்லை;