பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


ஆனாலும், அவ்வுண்மை உலகந் தோன்றியது தொட்டே விளங்கி நிற்கின்றது. அதுபோலத் திருமறையில் காணக்கிடக்கும் உண்மைகளும் ஒவ்வொருவர் வழியாக உலகத்தில் வெளிவந்தாலும் முதலிறுதி இல்லாதவையாம். இன்னும் இவ்வுண்மைகள் வெளிப்படலாம். அதனாலன்றோ இப்பேராறு இன்னும் ஓடிக்கொண்டே இருக்கின்றது? பொய்க் கொள்கைகள் இத்திருமறையில் உள்ளன என்றால் அவை ஒருநாளும் மறைமொழிகளாகா! உண்மையே மறைமொழி என்றால், பொய்ம்மொழி மறைமொழியாவது எங்ஙனம் இயலும்? பொய்ம்மொழிகள் மயக்கத்தால் பிறருடைய இடைச்செருகலாய் வந்தவையாகும். அவ்வழுக்கை எல்லாம் நீக்கித் தூய்மையாக்குவதே இந்த ஆற்றோட்டத்தின் செயலாம்.

III

எரியோம்பி, விருந்தோடுண்டு வருகையில், தமிழ்ப் பேராறு தேங்கத் தொடங்கியது. அம்மாக்களோ நிழலை இறுகத் தழுவி, முதலை நழுவ விட்டனர். எரியோம்பிய அழகு வழிபாட்டை மறந்து, எரியின் அழகினைக் கண்டு, அன்புரு ஆகாது, அதன் எரியுந் தன்மைக்கஞ்சிச் சிலர் விதிர் விதிர்த்தனர். தீயினை ஓர் ஆள் விழுங்கும் பேய் என எண்ணலாயினர். அப்பேய், வயிறார உண்ண, அதன் வாயில் உயிர்களையிட்டுப் பொசுக்கினால், அத்தீ மகிழ்ந்து நமக்கு அருளும் என எண்ணினர். அவ்வகையில் கள்ளுண்டு,