பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


மண்ணுதல் பறித்தலும் மாயம் இவை
எண்ணியக்கால் அவை இன்பம் அல்ல.

எனப் பாடுகின்றார். உடையணிந்து கோடலும் தலைமயிர் பறித்தலும் ஒழுக்க நிலையல்ல; அவ்வவ்வூர் வழக்க நிலையே.

மனத்தகத்து மாசில னாதலே அனைத்தறன்;
ஆகுல நீர பிற.

மனத்தது மாசாக மாண்டார் நீராடி;
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

என்பர் திருவள்ளுவர். திருவள்ளுவரையும் இவர்கள், தமது கொள்கையினராகக் கொள்கின்றனர் அன்றோ? ஆதலின், வள்ளுவனாரது கொள்கையை வற்புறுத்திய சம்பந்தர், அவ்வகையில், சமணர்களது உண்மைக் கொள்கைகளை வற்புறுத்துகின்றவரே ஆவர். சமணப் பயிரை மேயவந்த பட்டி மாடல்லர் அப்பெரியார்; களை கட்டி வளர்க்க வந்த பேருழவர் ஆவர்.

II

"மனத்தது மாசாகப் புறவொழுக்கம் பூண்டொழுகுதலை அன்றோ திருவள்ளுவர் பழிக்கின்றார்? சம்பந்தர், சமணர்களது மனத்தகத்தே என்ன மாசு காண்கின்றார்?" எனச் சிலர் வினவலாம். இப் பெரியாரும் அக்காலத்திலிருந்து சிலரிடம் கூடா ஒழுக்கம் குடி இருப்பது கண்டே அவர்களைப் பழித்துரையாடுகின்றார்.