பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91


"முன்னையூழ் வினையால் வென்ற முனிவ!கேள், மடிவதல்லாற்
சொன்ன வெஞ்சாம்பல், சீ!சீ! தொடுவமோ” என்று கொண்டு
நன்மைகள் சொல்லா நின்ற ஞானசம் பந்தர் தம்மைப்
புன்மைகள் சொல்லக் கண்டு பொறுத்திலர் பூதித் தொண்டர்;

எல்லோரையும் வலியக் கழுவேற்றி வாட்டினர்.

“கையர் தங்களைக் களையுமின் களையுமின்” எனவே
துய்ய மன்னவன் சொல்லுமுன் கறுவினர் தொண்டர்
பொய்செய் பாதகக் குழுவெலாந் தொலைந்திமைப் பொழுதில்
வெய்ய நீள்கழு வேறினர் மெலிந்துயிர் பதைப்ப.

கழுவேறியதைப் புனைந்துரைக்கின்றார் பெரும்பற்ற புலியூர் நம்பி.

புகல்வ தேதெதி ரிருந்திடுங் குதவழிப் புகுந்து
பகைகொண் முட்டுடைப் பட்டினி வயிற்றிடைக் குளித்துத்
தகவில் வஞ்சக நெஞ்சகந் தனில்நிணம் அருந்தி
இகழும் வாய்முகங் காட்டிட ஏறினர் கழுக்கள்.

பவமுறு கையர் வெய்ய பாறுசெங் குடர்பி டுங்கச்
சிவையவை சூழக் காகம் நிழலிடத் திரண்டோர் தாளிற்
தவமுயல் அலகை என்னச் சாலவே வாய்அங் காந்து
கவடிவெண் பற்கள் காட்டி இருந்தனர் கழுக்கள் தோறும்.

(பவம் - பிறவி; உறு - அடையும்; கையர் - தீயர்; சிவை - நரி; அலகை-பேய்; கவடி வெண் பற்கள் - பலகறை போன்ற வெண்பற்கள்).

என்று நகையாடுகின்றார் புலவர். சில சமணர்கள் உயிர் தப்பியோடச் செய்த சூழ்ச்சிகள் நகை ஊட்டுகின்றன.