உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

118

எனக்கு இனி சொத்தா! சுதந்திரமா; வாழ்க்கையில் இன்பமா? அண்ணா! என் கண் திறந்து விட்டது. என்னிதயம் உணர்ச்சியை அறிந்து நடக்கும் சக்தியைப் பெற்று விட்டது. இனி எனது வாழ்க்கை, புதிய பாதையில் ஆரம்பமாகி விட்டது. நீ என்ன சொன்னாலும், நான் இந்த வழக்கில் என்னுயிரைக் கொடுத்தாவது, நீ நிரபராதி என்பதை ருஜுப்படுத்தாமல், நான் இருக்கப் போவதில்லை. அது வரையில், நான் தீக்ஷை வளர்த்து, ஒரு வேளை புசித்து, வ்ருதமிருந்து பகவானை பூஜித்து வேண்டித் தொழுது, சத்யத்திற்கு ஜெயத்தைக் கொடுத்து, ரக்ஷிக்கும்படி நான் போராடுவேன். நான் வெற்றி பெறவில்லை என்றால் ,சத்யத்திற்கு மதிப்பில்லை. தர்மத்திற்கு ஜெயமில்லை—என்றதை கடவுளே காட்டி விட்டால், நானும் தயை தாக்ஷிண்யமின்றி, இந்த வெள்ளைக்காரனை, வேண்டுமென்று கொலை செய்து விட்டு, அங்கு உன்னுடன் வந்து விடுகிறேன்…” என்று அதீத உணர்ச்சியுடன் கூறும் வார்த்தைகளைக் கேட்டு, எல்லோரும் திடுக்கிட்டார்கள். கதறித் துடிக்கும் தாயின் நிலைமையை கவனியாமல், இருவரும் இப்படிப் பேசுவதும், சபதம் செய்வதையும் கண்ட பொதுமக்கள் வியப்புற்றார்கள். போலீஸார் எத்தனை தடுத்தும் கேட்காமல், உணர்ச்சிப் பெருக்கால் பொங்கி வரும் துக்கத்துடன், தாமோதரன் துடிக்கிறான்.

ஸ்ரீதரன் தாமோதரனைக் கட்டியணைத்து… “தம்பீ, நீ முற்றிலும் மாறிப் போய், புனர்ஜென்மம் எடுத்து விட்டதையறிந்து, நான் பரம சந்தோஷமடைகிறேன். நீ புனர் ஜென்மம் எடுத்ததன் பலன் நீயும் ராக்ஷஸனாகி, கொலைகாரனாகி விடுவது சற்றும் பொருந்தாது. என்னை நீ முற்றிலும் நம்புகிறாயா! உன்னிதய பூர்வமாய் நேசிக்கிறாயா!” என்றான்.

தாமோ:- சத்தியமாய், என்னிதயக் கோயிலில் உன்னை சாதாரண அண்ணனாகக் கொள்ளாமல், அண்ணன் என்கிற மகிமையை விளக்கிக் காட்டிய சாக்ஷாத் ஸ்ரீராமசந்திரனைப் போலவே, உன்னை நான் மதித்துப் பூஜிக்கிறேன் அண்ணா.