சாந்தியின் சிகரம்
இரண்டாம் பாகம்
-._.-=-._.-=-._.-=-._.-=-._.-=-._.-=-._.-=-._.-=-._.-=-._.-=-._.-=-._.-=-
17
இந்த அதிர்ச்சிகரமான விஷயத்தைக் கேட்ட அந்த ஊர் ஜனங்கள்—ஸ்ரீதரனின் அபிமானிகள்—அப்படியே கலங்கித் தவிக்கிறார்கள். பல பத்ரிகைகளில், பல விதமான தலையங்கங்களுடன் வந்துள்ள விஷயத்தைக் கண்டு, பொது மக்கள் ப்ரமித்துத் திடுக்கிட்டார்கள். “டாக்டர் ஸ்ரீதரனா இப்படிக் கொலை செய்திருக்கக் கூடும்? இது வெறும் கட்டுக்கதைதான, ஸார்! அவரைப் போன்ற தயாளன், உத்தமன் வேறு யாருமில்லை. அவருடைய மனத்தினால் கூட கொலையை நினைக்க மாட்டார் ஸார்! இது வேண்டுமென்றே, அந்த வெள்ளையர்கள் ஜோடித்துக் கூறிய கற்பனைதான். நிச்சயமாய் நான் சொல்வேன்” என்று பலர் மார்தட்டிப் பேசுகிறார்கள்.
ஏழைப் பங்காளனாய், ஏழைகளின் நலனுக்கே பல விதத்திலும் உழைத்துக் காப்பாற்றும் உத்தமனாய், விளங்கும் ஸ்ரீதரனுக்கு, இத்தகைய படாப்பழி வந்து விட்டதை, ஒருவருமே நம்பாது கூட்டங் கூட்டமாய் அவனைப் பார்க்க, போலீஸ் ஸ்டேஷனில் கூடி விட்டனர். ஸ்ரீதரன் சற்றும் கண் கலங்காமல், வந்தவர்களை எல்லாம் நோக்கிப் பரம வேதாந்தியாய்ச் சாந்த குண சம்பன்னனாய்க் கை குவித்தவாறு…"அன்பர்களே! போலீஸ் ஸ்டேஷன் வாசலில், இத்தகைய கூட்டம் கூடுவது சரியில்லை. பிறகு, போலீஸார் கூட்டத்தைக் கலைக்கத் தடியடி ப்ரயோகம் செய்ய நேரும். இத்தகைய குழப்பத்திற்கு, இடம் வைக்காதீர்கள். என்னிடம் இத்தனை அன்புடன் நீங்கள் பார்க்க வந்தது பற்றி, நான் பரம சந்தோஷமடைகிறேன். அன்பர்களே! ஒரே ஒரு வார்த்தை சொல்கிறேன்:
இச்சரீரத்தைச் சிறையில் அடைப்பதற்கும், தூக்கிலிடப் போவதற்கும் இத்தனை வருத்தப்படுகிறீர்களே!
சா—10