உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145

சாந்தியின் சிகரம்

மகா கெட்டிக்காரியான உஷாதேவி, தான் வந்துள்ள காரியத்தின் சகல விவரங்களையும் எழுதி, நாயுடுவினிடம் கொடுத்தாளாம். நாயுடு மிகவும் சந்தோஷத்துடன், இவர்களைத் தனியாகப் பார்த்துப் பேசி, தன்னாலாகிய வரையில் உழைத்து, டாக்டரின் பழியைத் தீர்ப்பதாகச் சொல்லியிருக்கிறாராம். அதை நம்மிடம் தெரிவித்து, நம்மைத் தேற்றி விட்டுச் செல்வதற்காக வந்தாளாம். என்ன அருமையான குணசாலியப்பா அவள்! உங்களுடன் பிறந்த சகோதரிகளுக்குத்தான் நிர்ப்பந்தம்; இவளாவது பாடுபட்டுக் காப்பாற்ற வந்திருப்பதும், ஒரு பாக்யந்தான். நீ அண்ணா சொல்லியுள்ளபடி சகலமும் செய்து நடத்து!… என்ன யோசிக்கிறாய்?…

தாமோ:- ஒன்றுமில்லையம்மா! அண்ணா அத்தனை பெரிய ஸ்தாபனங்களைத் தனது சொந்த உழைப்பின் வருவாயினாலேயே நடத்தி வருகிறார். இப்போதோ, வருவாய்க்கு வழியில்லை. நமது பணத்தையே செலவிட்டு நடத்த, உத்தரவு தர வேண்டும். அதைக் கேட்பதற்குத்தான் வந்தேன். என்னுடைய மூளை கெட்டதனத்தின் அலங்கோலமே, அண்ணாவுக்கு இந்தக் கதியாகி விட்டது எனபதை நன்றாக உணர்ந்து கொண்டேன். அம்மா! அண்ணா சாதாரண மனிதரல்ல. அவர் அவதார புருஷர் என்றால் தகும். எப்போது அவருடைய பழி நீங்கி, நல்ல காலம் பிறக்குமோ என்று ஏங்குகிறேன். இப்போது, மருந்துகள் வாங்குவதற்கும், உணவுப் பொருள்கள் வாங்கவும் 5 ஆயிரம் ரூபாய் வேணும். கொடம்மா!" என்றான்.

மறு பேச்சின்றி, கமலவேணி செக்கு எழுதிக் கொடுத்ததும், அதை எடுத்துக் கொண்டு சென்றான். அவனுள்ளத்தில் ஊற்றுப் போல் சுரக்கும் புதிய உணர்ச்சியை, அப்போதுதான் அவன் உணர்ந்து பூரித்தான். எனினும், அண்ணனின் நினைவு அலை மோதியது!

சா—13